Last Updated on: 17th December 2023, 08:42 pm
2023ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிய உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த மிக முக்கிய உலக நிகழ்வுகளை நினைவுகூருவது அவசியம்.பாலத்தீன போர், துருக்கி நிலநடுக்கம், டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து என்று உலக அளவில் பல முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு நடந்திருக்கிறது.அந்த நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் 2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழாகடந்த மே 6 ஆம் தேதி இங்கிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த முடிசூட்டு விழாவில் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு முடிசூட்டப்பட்டது.பிரிட்டனின் முன்னாள் ராணியான இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, அவரது மகன் அரியணை ஏறினார்.இதனையடுத்து, கடந்த மே மாதம் முழுவதும் லண்டன் மாநகரமே கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தது. அந்த விழாவிற்கு, உலகின் பல முக்கிய பிரபலங்கள் வருகை தந்திருந்தனர்.குறிப்பாக, இந்தியா உட்பட இங்கிலாந்து பேரரசின் கீழ் இருந்த அனைத்து நாடுகளும் இந்த விழாவில் கலந்துகொண்டன.
துருக்கி – சிரியா நிலநடுக்கம்கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி, துருக்கி, சிரியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான எல்லைக்கு அருகே தென்கிழக்கு துருக்கியில் மையம் கொண்டிருந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.1939ஆம் ஆண்டுக்கு பிறகு துருக்கியில் ஏற்பட்ட மிகப்பெரும் நிலநடுக்கம் இதுவாகும்.துருக்கி ஒரு மிகபெரும் பூகம்ப மண்டலத்தில் அமைந்திருப்பதால் அங்கு இப்படிப்பட்ட நில அதிர்வுகள் ஏற்படுவது புதிதல்ல.ஆனால், அந்த ஒரு நிலநடுக்கத்தோடு முடிந்து விடும் என்று நினைத்திருந்த நிலையில், அடுத்து வந்த 3 மாதங்களுக்குள் 30,000க்கும் மேற்பட்ட சிறிய நிலநடுக்கங்கள் அந்நாட்டில் பதிவாகியது.இந்த வருடம் துருக்கியில் ஏற்பட்ட மிகப்பெரும் நிலநடுக்கத்தால், துருக்கியில் 50,783 பேரும், சிரியாவில் 8,476 பேரும் உயிரிழந்தனர். உறுதிப்படுத்தப்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கை 59,259 ஆகும்.
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்கு அடியில் நசுங்கிய சம்பவம் அமெரிக்காவில், 100 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் நொறுங்கி, அதில் பயணம் செய்து ஐந்து கோடீஸ்வரர்கள் கடந்த ஜூன் 18ஆம் தேதி உயிரிழந்தனர்.பொதுவாக, நீர்மூழ்கிக் கப்பல்களையெல்லாம், ஸ்டீல், டைட்டானியம் மற்றும் அலுமினியும் உள்ளிட்ட கடினமான உலோகங்களைக் கொண்டு உருவாக்குவார்கள்.ஆனால், இந்த டைட்டன் நீர்மூழ்கியை, பரிச்சார்த்த முயற்சியாக கார்பன் ஃபைபரைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள்.அது பயணம் செய்த ஆழத்தில், ஒரு சதுர அங்குலத்திற்கு 2,500 கிலோ அழுத்தத்தைத் தாங்க வேண்டியிருந்திருக்கும்.ஆனால், அவ்வளவு அழுத்தத்தைத் தாங்க முடியாமல் டைட்டன் நீர்மூழ்கியானது, கடலுக்கு அடியில் உள்நோக்கி வெடித்து(Implode) நசுங்கியது.