Last Updated on: 23rd May 2024, 08:37 pm
காத்மாண்டு, இமயமலைத்தொடரில் உள்ள மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் 30வது முறையாக ஏறி நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா ஷெர்பா சாதனை செய்துள்ளார். இதன் வாயிலாக அதிகபட்சமாக 29 முறை எவரெஸ்டில் ஏறிய தன் சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
இமயமலையில் உள்ள மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். 29,032 அடி உயரமுள்ள இந்த சிகரத்தை நேற்று 30வது முறையாக ஏறி நம் அண்டை நாடான நேபாளத்தை சேர்ந்த மலையேற்ற வீரர் கமி ரீட்டா ஷெர்பா, 54, அசத்தியுள்ளார். ஏற்கனவே இவர் மே 12ல் இந்த சிகரத்தில் 29வது முறையாக ஏறினார்.இதுவரை அதிகமுறை எவரெஸ்ட்டில் ஏறிய தன் சாதனையை அவரே முறியடித்துள்ளார்.மலையேற்ற பயணத்தை 1992ல் துவக்கிய கமி, எவரெஸ்ட் தவிர, மவுண்ட் கே 2, சோ ஓயூ, லோட்ஸ், மனஸ்லு போன்ற சிகரங்களிலும் ஏறி சாதனை படைத்துஉள்ளார்.
இவருக்கு அடுத்த போட்டியாளரான சொலுகொம்புவை சேர்ந்த பிரசாந்த் தவா ஷெர்பா, 46, கடந்த 2023ல் எவரெஸ்ட்டில் 27வது முறையாக ஏறி சாதனை படைத்தார்.கடந்த 2023 வரை இந்த சிகரத்தில் 7,000 மலையேற்ற வீரர்கள் ஏறி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. 300 பேர் மலையேறும் போது உயிரிழந்துள்ளனர்.
இரு வீரர்கள் மாயம்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிவிட்டு முகாமுக்கு திரும்பிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் மலையேற்ற வீரர் டேனியல் பால் பீட்டர்சன் மற்றும் மலையேற்ற வீரர்களுக்கான வழிகாட்டி மகலுவை சேர்ந்த பாஸ் டென்ஜி ஷெர்பா ஆகிய இருவரும் மாயமாகியதாக தகவல் வெளியாகியுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுவிட்டு நேற்று முன்தினம் கீழ் முகாமுக்கு திரும்பியபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையேற்ற வீரர்கள் பலர் சிக்கினர்.
அப்போது நாகா டென்ஜி ஷெர்பா தலைமையிலான குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மலையேற்ற வீரர்கள் சிலரை மீட்டனர். ஆனாலும் பிரிட்டன் வீரர் பீட்டர்சன் மற்றும் வழிகாட்டி பாஸ் டென்ஜி ஆகியோரை மீட்க முடியவில்லை என, அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
You have remarked very interesting details! ps decent website.Leadership