Last Updated on: 14th May 2024, 09:06 pm
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்தனர்.ஆனாலும் பொதுமக்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், முசாபராபாத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.துணை ராணுவ வீரர்களின் வாகன கான்வாய் முசாபராபாத் சென்றடைந்த போது, ஷோரன் டா நக்கா கிராமத்திற்கு அருகே பொதுமக்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். துணை ராணுவ வீரர்கள் பொதுமக்களை கலைந்து போகுமாறு வலியுறுத்தினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் பொதுமக்களில் 3 பேர் இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அப்பகுதியில் இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது