Last Updated on: 9th December 2023, 03:04 pm
போர்ப்ஸ் இதழ், 2023-ம் ஆண்டுக்கான உலகின் சக்திமிக்க பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 4 இந்தியப்பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.
அரசியல், ஊடகம், நிதி, வணிகம் ஆகிய தளங்களில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் மற்றும் தங்கள் துறையில் பெரும்தாக்கம் செலுத்திவரும் 100 பெண்களை போர்ப்ஸ் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
இந்த ஆண்டு பட்டியலில், இந்தியாவிலிருந்து நிர்மலா சீதாராமன், ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, சோமா மண்டல், கிரண் மஜூம்தார் ஷா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 32-வது இடத்தில் இருக்கிறார். நிர்மலா சீதாராமன் 2017 – 2019 வரையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார்.
2019-ம்ஆண்டு முதல் மத்திய நிதி அமைச்சராக உள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பிறகு, பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் நிதித் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்த இரண்டாவது பெண் நிர்மலா சீதாராமன். 2022-ம் ஆண்டுக்கான போர்ப்ஸ் பட்டியலில் நிர்மலா சீதாராமன் 36-வதுஇடத்தில் இருந்தார். இந்த ஆண்டு 32-வது இடம்பிடித்துள்ளார்.
ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவன தலைவர் ரோஷினி நாடார்மல்ஹோத்ரா 60-வது இடத்தில் உள்ளார். 42 வயதாகும் ரோஷினி, சிவ்நாடாரின் ஒரே மகள் ஆவார். இந்தியஐடி நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பேற்ற முதல் பெண் என்ற பெருமை அவருக்கு உண்டு.
ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியாநிறுவனத் தலைவர் சோமா மண்டல்70-வது இடத்தில் உள்ளார். 2021-ம்ஆண்டு ஸ்டீல் அதாரிட்டி ஆஃப்இந்தியா நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்நிறுவன தலைவர் பொறுப்பு வழங்கப்பட்ட முதல் பெண் சோமா மண்டல் என்பது குறிப்பிடத்தக்கது. மருந்துதயாரிப்பு நிறுவனமான பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார்ஷா 76-வது இடத்தில் உள்ளார்.பெங்களூரு ஐஐஎம் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.