Last Updated on: 7th July 2024, 08:45 am
டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில், மயக்கமடைந்த பயணியை ஆப்பிள் வாட்ச் உதவியுடன் மருத்துவர் காப்பற்றிய சம்பவம் நடந்துள்ளது.
ஜூலை 2 ஆம் தேதி பறந்து கொண்டிருந்த விமானத்தில் 56 வயதான பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல், மயக்கமடைந்துள்ளார்.
அதே விமானத்தில் பயணம் செய்த, கேரளாவின் ராஜகிரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் குருட்டுகுலம் அப்பெண்ணின் உடல்நிலையை சோதித்தார்.அப்போது அவரிடம் எந்த மருத்துவ உபகரணமும் இல்லாததால், மயக்கமடைந்த பெண் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியோடு, அவருடைய இதயத்துடிப்பைச் சோதனை செய்தார். மேலும் எலக்ட்ரோ கார்டியோகிராம் சோதனையையும் செய்தார்.
அப்போது அப்பெண்ணின் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததையும், ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததையும் அவர் கண்டுபிடித்தார். பின்னர் விமானத்தில் இருந்த மருந்துகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினார்.விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியதும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மருத்துவர்கள் மருத்துவருக்கான அடையாள அட்டையுடன் விமானத்தில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் யாருக்கேனும் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், அவருக்கு நம்மால் சிகிச்சை அளிக்க முடியும். அடையாள அட்டை இல்லாவிட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்க மாட்டார்கள்” என்று மருத்துவ அடையாளத்தின் முக்கியத்துவத்தை மருத்துவர் குருட்டுகுலம் விவரித்தார்.