வங்காள தேச கடற்பகுதியை புரட்டி போட்ட ராமெல்: 7 பேர் பலி

வங்காள தேச கடற்பகுதியை புரட்டி போட்ட ராமெல்: 7 பேர் பலி

Last Updated on: 27th May 2024, 09:13 pm

டாக்கா

,வங்கக் கடலில் உருவான ‘ராமெல் ‘ புயல் நேற்று இரவு 8.30 மணியளவில் மேற்கு வங்காளத்தில் உள்ள கேப்புபாரா தீவுக்கும், மேற்கு வங்காளத்தின் சாகர் தீவுக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 135 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. புயல் கரையை கடந்தபோது அடித்த சூறாவளிக் காற்றினால் ஏற்பட்ட விபத்துகளில் 7 பேர் பலியாகினர்.

மணிக்கு 120 கிலோ மீட்டர்வேகத்தில் காற்று வீசியதால், மரங்களும் மின் கம்பங்களும் விழுந்ததில் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால், நூற்றுக்கணக்கான கிராமங்கள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கரையைக் கடக்கத் தொடங்கிய ராமெல், புயலாக வலுவிழந்து இன்று அதிகாலை கரையை கடந்தது. புயல் காரணமாக பல பகுதிகளில் மிக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.

பாரிசல், போலா, பதுகாலி, சத்கிரா மற்றும் சட்டோகிராம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

பதுகாலியில், ஒருவர் தனது சகோதரி மற்றும் அத்தையை தங்குமிடத்திற்கு அழைத்து வருவதற்காக வீட்டிற்கு சென்ற போது புயல் காற்றில் அடித்துச் செல்லப்பட்டார் என்றும் புயலின் போது மறைப்பதற்கு ஓடியதால் சத்கிராவில் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார் என்றும் பரிஷால், போலா மற்றும் சட்டோகிராம் ஆகிய இடங்களில் 5 பேர் உயிரிழந்ததாக டாக்காவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக சில பகுதிகளில் 12 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடிக்கிறது. புயல் ஓய்ந்ததும் மின் இணைப்புகளை சீரமைக்க மின்வாரிய ஊழியர்கள் தயாராக இருப்பதாக வங்காளதேச கிராமப்புற மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளர் பிஸ்வநாத் சிக்டர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் பருவமழைக் காலத்தில் உருவான முதல் புயலாக ராமெல் உள்ளது. புயலுக்கு ஓமன் நாடு ‘ராமெல்’ என பெயரிட்டுள்ளது. இதற்கு அராபிய மொழியில் மண் என்று அர்த்தமாகும். ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை செப்டம்பர் வரை நீடிப்பது வழக்கம்.

Leave a Comment