Last Updated on: 9th January 2024, 01:40 pm
வங்கதேச பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. நவ்கான்-2 தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் ஷேக் ஹசீனா, கோபால்கன்ஞ்-3 தொகுதியில் 8-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 2.49 லட்சம் வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட வங்கதேச சுப்ரீம் கட்சியின் வேட்பாளர் நிஜாமுதீனுக்கு 469 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 5-வது முறை வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்க உள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஹசீனாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மை யாக வசிக்கும் வங்கதேசத்தில் 17 கோடி மக்கள் உள்ளனர். இதில் 10 சதவீதம் பேர் இந்துக்கள் ஆவர். அவர்கள் அனைவரும் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.