Last Updated on: 12th May 2023, 09:44 am
ரோம்: வடக்கு இத்தாலியின் மிலன் நகரின் மைய பகுதியில் ஏற்பட்ட மிக பெரிய வெடி விபத்தால் அங்கே உள்ள பல வாகனங்கள் வரிசையாகத் தீப்பிடித்து எரிந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் முக்கிய நாடுகளில் ஒன்றானது இத்தாலி. இன்றைய தினம் வடக்கு இத்தாலியின் மிலன் நகரின் மையப்பகுதியில் மிக பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்தில் அங்கே இருந்த பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இந்த மோசமான வெடி விபத்தால் மிலன் நகரமே அதிர்ந்து போனது. அந்தளவுக்கு வெடிச் சத்தம் காதை பிளப்பதாக இருக்கிறது. இதனால் அங்கே பல கார்கள் தீப்பிடித்து எரிந்தது.
இந்த மோசமான விபத்தில் இதுவரை ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் யாரேனும் உயிரிழந்துள்ளனரா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
மிலனில் உள்ள போர்டா ரோமானா பகுதியில் உள்ள பையர் லோம்பார்டோ சாலையில் முதலில் ஒரு வாகனத்தில் வெடி விபத்து ஏற்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து அருகே இருந்த மற்ற வாகனங்களும் இந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற டிரக்கில் முதலில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்படியே அது அருகே இருந்த மற்ற வாகனங்களுக்கும் பரவியுள்ளது” என்றார்.
பக்கத்தில் இருந்த கார்களில் பரவிய தீ விரைவில் அணைக்கப்பட்டது, இருப்பினும், இதில் ஏற்பட்ட புகை அதிக உயரத்திற்கும் எழுந்தது. இந்த தீ விபத்து தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதில் கறுப்பு நிறத்தில் புகை கிளம்பியுள்ளதும் அதைத் தீயணைப்பு வீரர்கள் அணைக்க போராடும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.