Last Updated on: 16th June 2023, 12:21 pm
வெயிலின் தாக்கம் ஒவ்வொரு கோடை காலமும் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், ஐக்கிய அமீரகத்தில் இன்று முதல் அடுத்த 3 மாதத்திற்கு மதிய நேரத்தில் “மிட்டே பிரேக்” எனப்படும் மதிய நேர இடைவெளி வழங்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பூமியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மதிய நேரங்களிலேயே வெளியே செல்லவே தயங்கும் அளவுக்கு வெப்பம் உச்சத்தில் இருக்கிறது. நம்ம ஊரிலேயே வெப்பம் இப்படி இருக்கிறது என்றால் மத்திய கிழக்கு நாடுகள் வெயில் எந்தளவுக்கு இருக்கும் எனத் தனியாகச் சொல்லத் தேவையில்லை.
மிட் டே பிரேக்: இதனிடையே ஐக்கிய அமீரகத்தில் இன்று (ஜூன் 15) முதல் செப்டம்பர் 15 வரை ‘மிட்டே பிரேக்’ என்ற திட்டம் அமலுக்கு வருகிறது. அதன்படி மதியம் 12:30 மணி முதல் மாலை 3 மணி வரை வேலை திறந்தவெளியில் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்தக் காலகட்டத்தில் அங்கே வெப்பம் கடுமையாக இருக்கும்.
110 டிகிரியை கூட வெப்பம் தாண்டிவிடும். இதன் காரணமாகவே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை அந்நாட்டின் மனிதவள மற்றும் குடியேற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இது குறித்து மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாசிட்டிவான ஒரு பணிச்சூழலை ஒருங்கிணைக்கவும், தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய ஐக்கிய அமீரகத்தின் உறுதிப்பாட்டை இந்த மிட் டே பிரேக் திட்டம் உணர்த்துகிறது.
பணியாளர்களின் நலனை உறுதிசெய்வது, பாதுகாப்பான மற்றும் அனைவரும் விரும்பக் கூடிய பணிச்சூழலை உருவாக்குவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
தேவையான வசதிகள்: எதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விழிப்புணர்வு இங்குள்ளவர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. இது தொழிலாளர்களுக்குக் குறிப்பிடத்தக்க மைல்கல்.
அவர்களின் நலனை இது பெரிதும் மேம்படுத்தும்” என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் இதைப் பின்பற்றும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேரடியாகச் சூரிய வெப்பத்தில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில் ஓய்வெடுக்க நிழல் தரும் பகுதிகள் மற்றும் மின்விசிறிகள் உள்ளிட்ட குளிரூட்டும் சாதனங்கள், போதுமான குடிநீர் உள்ளிட்ட பிற வசதிகளைச் செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இந்த முடிவு தினசரி வேலை நேரத்தை எட்டு மணி நேரமாக மாற்றுகிறது.
அந்நாட்டின் சட்டப்படி, ஒரு ஊழியர் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய வேண்டியிருந்தால், அது கூடுதல் நேரமாகக் கருதப்படும். அதற்குக் கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
யாருக்கு பொருந்தாது: அதேநேரம் சில காரணங்களுக்காகக் குறிப்பிட்ட வேலைகளைச் செய்வோருக்கு இந்த மிட் டே பிரேக்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இடைவெளிக்குப் பிறகு ஒத்தி வைக்க முடியாத பணிகளுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, பவர் லைன் உள்ளிட்ட பிரிவுகளில் வேலை செய்வோருக்கும் இந்த மிடட் டே பிரக்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர மற்ற அனைவருக்கும் இந்த பிரேக் பொருந்தும். இது குறித்த விரிவான சுற்றறிக்கையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட பணியில் இருப்போருக்கு மிட் டே பிரேக் இல்லை என்று விலக்கு அளித்தாலும் கூட தேவையான அளவு குடிநீர், கூலிங் கருவிகளை வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மிட் டே பிரேக் வழங்காத நிறுவனங்கள் குறித்த புகார்களை மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம், 600590000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக தனியாகச் செயலி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.