40மீ உயரத்தில் கட்டி முடிக்கப்பட்ட அமீரகத்தின் மிகப்பெரிய ரயில் பாலம்..!! வீடியோவை பகிர்ந்த எதிஹாட் ரயில்..!!

40மீ உயரத்தில் கட்டி முடிக்கப்பட்ட அமீரகத்தின் மிகப்பெரிய ரயில் பாலம்..!! வீடியோவை பகிர்ந்த எதிஹாட் ரயில்..!!

Last Updated on: 6th November 2023, 10:28 am

ஐக்கிய அரபு அமீரகத்தின் மெகா தேசிய இரயில் திட்டமான எதிஹாட் ரயில் திட்டத்தின் கீழ், கட்டுமான பணிகள் பல மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அமீரகத்தின் அண்டை நாடான சவூதி மற்றும் ஓமான இணைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் மிக எளிதாகவும் விரைவாகவும் மக்கள் பயணங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளில் ஒரு பகுதியாக ஃபுஜைராவில் உள்ள மலைகளில் 40 மீட்டர் உயரத்தில் ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பிரம்மிப்பூட்டும் காட்சிகளை எதிஹாட் ரயில் X தளத்தில் பகிர்ந்துள்ளது.

கம்பீரமான 14 தூண்களால் நிறுவப்பட்டுள்ள அல் பித்னா ரயில் பாலம், ஃபுஜைராவின் மலைகளில் 600 மீட்டருக்கும் அதிகமாக நீண்டு செல்கிறதாக கூறப்பட்டுள்ளது. இது ஃபுஜைரா மற்றும் அமீரகத்தின் பிற பகுதிகளுக்கு இடையேயான வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. இந்த பாலம் எமிரேட்டில் வேகமாக வளர்ந்து வரும் இரயில் நெட்வொர்க்கின் மிக உயரமான அமைப்பாகும், இது அமீரகத்தின் முக்கிய உள்கட்டமைப்பு முயற்சியினை பிரதிபலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 19 மாதங்களில் சுமார் 250 தொழிலாளர்களால் கட்டப்பட்ட இந்த உயரமான பாலம், துபாயின் அல் குத்ரா பாலம் மற்றும் அபுதாபியின் கலீஃபா துறைமுகத்திற்குள் ரயில்கள் நுழைய அனுமதிக்கும் கடல் பாலம் போன்ற எதிஹாட் ரயில் நெட்வொர்க்கில் அமைந்துள்ள பல பாலங்களில் இதுவும் ஒன்றாகும்.

இதேபோல், Etihad Rail அல் வத்பா ரயில் பாலத்தின் படத்தை கடந்த ஜூன் மாதம் பகிர்ந்தது. இது E22 அபுதாபியிலிருந்து அல் அய்ன் சாலை வழியாக ரயில்கள் செல்ல அனுமதிக்கிறது. சுமார் 10,000 கன மீட்டர் கான்கிரீட், 3,500 டன் எஃகு வலுவூட்டல் மற்றும் ஏராளமான கான்கிரீட் பீம்களைப் பயன்படுத்தி 13 மாதங்களில் கட்டப்பட்ட இந்த பாலம், அமீரக ரயில் நெட்வொர்க்கில் உள்ள முக்கிய உள்கட்டமைப்பு ஆகும்.

மேலும், கடந்த பிப்ரவரி முதல் செயல்பட்டு வரும் எதிஹாட் ரயில் சரக்கு நெட்வொர்க் நாட்டில் உள்ள அனைத்து எமிரேட்களையும் மற்றும் ஏழு லாஜிஸ்டிக்ஸ் மையங்களையும் இணைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முதலில் 2009 இல் நிறுவப்பட்ட எதிஹாட் ரயில் நெட்வொர்க், தற்போது சுமார் 900 கிமீ வரை பரவியுள்ளது மற்றும் விரிவாக்கப் பணிகள் முழுமையாக முடிந்ததும் 1,200 கிமீ வரை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வெகுவிரைவில் பயணிகள் சேவையையும் தொடங்க திட்டமிட்டு வருகிறது. ஆனால் பயணிகள் சேவைக்கான தொடக்க தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment