Last Updated on: 6th August 2023, 10:37 pm
உலகில் இப்போது இருக்கும் உயிரினங்களிலேயே மிகப் பெரியது என்றால் அது நீல திமிங்கலம் தான். ஆனால், நீல திமிங்கிலங்களுக்கே போட்டி கொடுக்கும் வகையில் மெகா திமிங்கலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அறிவியல் பூர்வமாகப் பார்க்கும் போது நமது இந்த பூமி பல கோடி ஆண்டுகள் பழமையானதாக இருக்கிறது. வெறும் நெருப்பு பிழம்பாக இருந்த இந்த பூமி நாம் இப்போது இருக்கும் இந்த நிலைக்கு வர பல கோடி ஆண்டுகள் ஆகியுள்ளன.
இத்தனை ஆண்டுகளில் நமது பூமியில் எண்ணில் அடங்காத பல உயிர்கள் வாழ்ந்து மறைந்திருக்கும். அவை குறித்து நடத்தப்படும் ஆய்வுகளில் பல சுவாரசிய தகவல்கள் நமக்குத் தெரிய வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
நீல திமிங்கலம்: இப்போது உலகிலேயே மிகப் பெரிய உயிரினமாக நீல திமிங்கலம் இருக்கிறது. அட்லான்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் காணப்படும் இந்த திமிங்கலங்கள் அதிகபட்சம் 80 முதல் 100 அடி வரை நீளம் கொண்டதாக இருக்கும். அதிகபட்சம் 200 டன் வரை எடை கொண்டதாக இது இருக்கும். இது சுமார் 35 யானைகளுக்குச் சமமாகும்.
இப்போது மிக பெரிய உயிரினமாக திமிங்கலம் இருக்கிறது. ஆனால், இந்த நீல திமிங்கலத்தையே தூக்கிப் போடும் வகையில் ஒரு உயிரினம் வாழ்ந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் அதுதான் உண்மை.
மெகா திமிங்கலம்: நீல திமிங்கலமே இதன் அருகில் இருந்து குட்டி உயிரினம் போலத் தான் இருக்கும். இதுவும் ஒரு வகை திமிங்கலம் தானாம். இவை சுமார் 39 மில்லியன், அதாவது 3.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கடல்களை ஆட்சி செய்துள்ளன. உலகம் உருவானது முதலே பூமியில் வாழ்ந்த பாலூட்டிகளிலேயே இதுதான் மிகப் பெரியதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் ஆய்வாளர்கள் இந்த திமிங்கலத்தின் எலும்புக் கூட்டின் ஒரு பகுதியைக் கண்டுபிடித்தனர். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கடலால் சூழ்ந்திருந்த பெரு நாட்டின் தெற்கு கடற்கரையில் உள்ள இகா பாலைவனத்தில் ஆய்வாளர்கள் இதைக் கண்டுபிடித்தனர். அங்கு 13 முதுகெலும்புகள், நான்கு விலா எலும்புகள் மற்றும் ஒரு இடுப்பு எலும்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஆய்வாளர்கள் அதை விரிவாக ஆய்வு செய்தனர்.
300 டன் எடை: இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் ஆய்விதழில் இப்போது வெளியாகியுள்ளது. இந்த அழிந்துபோன மெகா திமிங்கலம் 90 முதல் 340 டன் வரை எடை கொண்டதாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் நீலத் திமிங்கலத்தை விட மூன்று மடங்கு பெரியதாக இது இருந்துள்ளது.
உலகில் இதுவரை வாழ்ந்த உயிரினங்களிலேயே நீல திமிங்கலம் தான் பெரியது என ஆய்வாளர்கள் முதலில் கருதிய நிலையில், அதையே தூக்கிச் சாப்பிடுவதாக இருக்கிறது இந்த மெகா திமிங்கலம். இதனை அவர்கள் Perucetus colossus என்று பெயரிட்டுள்ளனர். இது அழிந்து போன பாசிலோசவுரிட் குடும்பத்தை சேர்ந்ததாகும். எளிமையாகப் புரிய வேண்டும் என்றால் இவை டால்பின்கள், திமிங்கலங்கள் போன்ற பாலூட்டிகளின் வகுப்பைச் சேர்ந்தவை. இவை சுமார் 4.1 கோடி முதல் 2.35 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவையாகக் கருதப்படுகிறது.
பிரிட்டனில் உள்ள ஆய்வகத்தில் இந்த எலும்புகளை மீண்டும் செட் செய்து பார்த்துள்ளனர். அதில் இந்த மெகா திமிங்கலங்கள் நீல திமிங்கலத்தின் எலும்புக்கூட்டை விட இரண்டு முதல் மூன்று மடங்கு கனமானதாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை திமிலங்களுக்கு மேற்பரப்பில் கூடுதல் எலும்பு இருப்பதே இந்த அதீத எடைக்குக் காரணமாகும். கடலுக்குள் தங்களைக் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளவே மெகா திமிங்கலங்கள் தங்கள் கூடுதல் எடையைப் பயன்படுத்துகின்றன.
கடலின் ராஜா: பெருங்கடலில் ராஜாவை போல வாழ்ந்த இந்த கொலோசஸ் மெதுவாக நீந்தக்கூடியவையாகவும் கடற்கரைக்கு அருகில் வாழ்ந்தவையாகவும் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது எப்படி இருந்திருக்கலாம் என்பது குறித்த படத்தை ஆய்வாளர்கள் பகிர்ந்துள்ள நிலையில், அது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.