Last Updated on: 12th November 2023, 10:44 am
ரெய்க்ஜாவிக்: ஐஸ்லாந்தின் தென்மேற்கு தீபகற்பத்தில் நேற்று முன்தினம் தொடர்ச்சியாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஐஸ்லாந்து அரசு அவசர நிலை பிரகடனம் செய்தது. இந்த நிலநடுக்கம் எரிமலை வெடிப்புக்கு முன்னோடியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.வட அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில் 33 சீறும் எரிமலைகள் உள்ளன. எரிமலைகள் வெடிப்பதற்கு முன் அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகும். இந்நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்லாந்தின் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ச்சியாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்து தென்மேற்கில் சுமார் 3 கி.மீ. தொலைவில் கிரிண்டாவிக் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து வடக்கு மற்றும் தெற்கு நோக்கி செல்லும் சாலைகள் சேதம் அடைந்ததால் அந்த சாலைகளை அதிகாரிகள் மூடியுள்ளனர்.இந்த கிராமத்தில் சுமார் 4,000 பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டால் இவர்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். 4 இடங்களில் தற்காலிக முகாம்கள் மற்றும் உதவி மையங்கள் ஏற்படுத்தியுள்ளனர்.