Last Updated on: 29th July 2023, 10:30 am
இத்தாலி கடற்பரப்பில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்துக்குள்ளான கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த உடைந்த கப்பலில் ஒயின் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட ஜாடிகள் இருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.
மனிதன் நாகரீகமடைய தொடங்கியது முதல் கடல் வழி வணிகத்தை மேற்கொண்டு வருகிறான். இந்த கடல் வணிபத்திற்கு முன்னோடி ஒரு சில நாடுகள்தான். அதில் ஒன்றுதான் பண்டைய ரோம் பேரரசு. ரோம் நகரத்திலிருந்து ஏராளமான பொருட்கள் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, பல்வேறு நாடுகளிலிருந்து சில பொருட்களை ரோம் மக்கள் இறக்குமதியும் செய்துள்ளனர்.
இப்படி கடல் வழி வணிகம் செய்யும் போது கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது. சுமார் 2,000 ஆண்டுகள் அதாவது கிபி 1 அல்லது 2ம் நூற்றாண்டை சேர்ந்த கப்பல் ஒன்று கடலில் விபத்தில் மூழ்கி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 20 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த கப்பல் கரைக்கு வருவதற்கு முன்னரே 525 ஆழத்தில் மூழ்கிவிட்டது. இதை இத்தாலி நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாக விபத்துக்குள்ளான கப்பலை கண்டுபிடிப்பது ரொம்ப ரேரான விஷயமாகும். ஏனெனில் ஆழ்கடல் ஆய்வுகளில் மனிதர்கள் அதிகம் ஈடுபட்டதில்லை. செவ்வாய் கிரகத்தில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடித்த மனிதர்கள் ஆழ்கடலில் எத்தனை உயிரினங்கள் இருக்கிறது என்பதை இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கவில்லை. அப்படி இருக்கையில் தற்போது இந்த கப்பலை கண்டுபிடித்தது பெரிய சாதனை என்றே சொல்ல வேண்டும்.
இந்த கப்பலின் உடைந்த பாகங்களிலிருந்து ஜாடிகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜாடிகள் எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை. இருப்பினும் எண்ணெய், ஒயின் போன்றவறை கொண்டு செல்ல பயன்படுத்தியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது சில உடையாத சீலிடப்பட்ட ஜாடிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை அதில் ஒயின் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அப்படி ஒயின் கண்டுபிடிக்கப்பட்டால் உலகின் மிகவும் பழமையான ஒயினாக இதுதான் இருக்கும்.
ஆனால் இதை மீட்டெடுப்பதில் சிக்கல் இருப்பதாக இத்தாலி அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போதைக்கு ரோபோக்களை கொண்டுதான் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. எனவே ரோபோக்களை கொண்டே இந்த ஜாடிகளை மீட்டெடுக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர். ஆனால் அதுவும் எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை. இதற்கு முன்னர் கடந்த 20148ம் ஆண்டு பல்கேரிய கடல் பரப்பில் இதேபோன் கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கப்பல் கிரேக்க நாட்டை சேர்ந்ததாகும். இதன் வயது சுமார் 2,400 ஆண்டுகளாகும். இதுதான் தற்போது வரை கண்டெடுக்கப்பட்ட மிக மிக பழமையான கப்பலாகும்.