Last Updated on: 26th June 2023, 07:54 pm
உலகிலேயே சிறந்த 50 ரெஸ்டாரண்ட்டுகளின் பட்டியல் இப்போது வெளியாகி உள்ளது. இதில் 2 இந்திய உணவகங்கள் இடம்பிடித்து அசத்தியுள்ள நிலையில் அந்த ரெஸ்டாரண்ட்டுகள் எங்கு உள்ளன என்பது பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
மனிதன் நீண்டகாலம் உயிர் வாழ வேண்டும் என்றால் உணவு, தண்ணீர் அத்தியாவசியமாகும். இதனால் தான் இந்த 2 பொருட்களை யாரும் தவிர்ப்பதே இல்லை. குறிப்பாக விதவிதமான உணவை சுவைப்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக வெளியூர், வெளிநாடு சென்றால் அங்கு ஸ்பெஷலாக இருக்கும் உணவுகளை வாங்கி சுவைக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆண்டுதோறும் ஓட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் என்ற பெயர்களின் உணவகங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் தான் உலகில் சிறந்த 50 ரெஸ்டாரண்ட்டுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியல் முந்தைய ஆண்டுகளில் வெளியான பட்டியலை விட சிறப்பானதாக அமைந்துள்ளது. ஏனென்றால் இந்த பட்டியலில் 2 இந்திய உணவகங்கள் இடம்பிடித்துள்ளன. இது இந்திய உணவுகளுக்கு கிடைத்த கிரெடிட்டாக பார்க்கப்படுகிறது.
அதாவது உலகில் சிறந்த 50 ரெஸ்டாரண்ட்டுகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி ஸ்பெயினின் வலென்சியாவில் உள்ள சிட்டி ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் நடந்தது. இதில் சாண்டியாகோ கலட்ராவாவின் கற்பனை திறனால் கலைநயமிக்க வடிவில் அமைந்துள்ள கட்டடத்தில் வைத்து சிறந்த ரெஸ்டாரண்ட்டுகளுக்கான விருது வழங்கப்பட்டது.
உலகமெங்கும் செயல்படும் ரெஸ்டாரண்ட்டுகளில் பரிமாறப்படும் உணவுகள், உணவுகளின் தரம், சுவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் உணவகங்கள் தரவரிசயை செய்யப்பட்டன. இந்த பட்டியலில் பெரு நாட்டின் லிமா நகரில் உள்ள சென்ட்ரல் (Central) ரெஸ்டாரண்ட் முதலிடம் பிடித்துள்ளது.
பொதுவாக இந்த பட்டியலில் எப்போதும் முதலிடம் பிடிக்கும் உணவகம் ஐரோப்பா, அமெரிக்காவில் தான் செயல்பட்டு வரும். ஆனால் இந்த முறை அந்த டிரெண்ட் மாறியுள்ளது. முதல் முறையாக ஐரோப்பா, அமெரிக்காவுக்கு வெளியே செயல்படும் பெரு நாட்டின் லிமா நகரில் உள்ள சென்ட்ரல் (Central) ரெஸ்டாரண்ட் முதலிடம் பிடித்துள்ளது.இதுமட்டுமின்றி முதலிடம் பிடித்த சென்ட்ரல் ரெஸ்டாரண்ட்டில் பெண் சமையல் கலைஞர் பணியாற்றி வருகிறார்.
பெண் சமையல் கலைஞர் பணியாற்றும் ஒரு ரெஸ்டாரண்ட் உலகில் டாப் 50 உணவகங்களில் முதலிடம் பிடிப்பதும் இதுதான் முதல் முறையாகும். அதன்பிறகு இந்த பட்டியலில் 2வது இடத்தில் பார்சிலோனாவில் உள்ள டிஸ்ஃப்ரூடார் (Disfrutar) என்ற உணவகமும், 3வது இடத்தில் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட்டில் செயல்பட்டு வரும் டிவர்க்ஸோ (Diverxo) ஆகியவை உள்ளன.
இந்த பட்டியலில் இந்திய உணவகங்களான ட்ரெசிண்ட் ஸ்டூடியோ (Tresind Studio) மற்றும் கக்கன் ஆனந்த் (Gaggan Anand) உணவகங்களும் இடம்பிடித்துள்ளன. இதில் ட்ரெசிண்ட் ஸ்டூடியோ எனும் ரெஸ்டாரண்ட் உலகில் சிறந்த உணவகங்களின் பட்டியலில் 11வது இடத்தை பிடித்துள்ளது. கக்கன் ஆனந்த் ரெஸ்டாரண்ட்17 வது இடத்தை பிடித்துள்ளது.
இருப்பினும் இந்த 2 ரெஸ்டாரண்ட்டுகளும் இந்தியாவில் இல்லை. மாறாக இந்திய உணவகங்களை பரிமாறும் ட்ரெசிண்ட் ஸ்டூடியோ ரெஸ்டாரண்ட் துபாயில் அமைந்துள்ளது. இந்த உணவகத்துக்கு இன்னொரு சிறப்பு உள்ளது. அதாவது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2 மிச்செலின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரே இந்திய உணவகம் இது மட்டும் தான். இந்த உணவகம் கிரியேட்டிவ்வாகவும், சுவையாகவும் இந்திய உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி பெயர் பெற்றுள்ளது.
இதேபோல் 17 வது இடம் பிடித்துள்ள கக்கன் ஆனந்த் உணவகம் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் உணவு பழக்க வழக்கங்களை தற்போதைய மக்களுக்கு ஏற்ற வகையிலும், அவர்கள் விரும்பும் வகையிலும் புதுமையாக வழங்கி வருவதில் இந்த உணவகம் பெயர் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு கக்கன் என்ற பெயரில் செயல்பட்ட இந்த உணவகம் ஆசியாவின் 50 சிறந்த ரெஸ்ட்டாரண்டுகளின் விருதுகளையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.