Last Updated on: 10th August 2023, 06:08 pm
வாட்ஸ்அப் தளத்தில் இருக்கும் இந்த முக்கியமான வசதி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது பயனாளர்களுக்கு எந்த வகையில் பயனாக இருக்கும் என்பதையும் பார்க்கலாம்.
இந்த நவீன உலகில் எல்லாமே செயலிகள் சார்ந்தே இயங்குகிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு எந்தவொரு செய்தியும் இணையத்தில் மின்னல் வேகத்தில் பரவ தொடங்கிவிடுகிறது.
ஒரு தகவல் உண்மையா பொய்யா என்பது தெரிவதற்கு முன்பே அது மிக எளிதாகப் பல லட்சம் பேருக்குப் பரவி விடுகிறது. இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் எந்தளவுக்கு வரமாக இருக்கிறதோ.. அதே அளவுக்கு நமக்குப் பிரச்சினைகளையும் தருகிறது.
போலி செய்திகள்: இதனால் போலி செய்திகள் என்பது ரொம்பவே பெரிய பிரச்சினையாக மாறிவிட்டு. ஒரு செய்தி போலி செய்தி என்பதை அனைவரும் விளக்கிய பிறகு.. மீண்டும் கொஞ்ச நாள் கழித்து அதைப் போலி செய்தி இன்னும் வீரியமாகவும் வேகமாகவும் பரவும் போக்கு அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் போலி எனத் தெரிந்த செய்தியும் கூட மீண்டும் பரவும்போது அதை மக்கள் உண்மை என்று நினைத்துக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது பொதுவாக வாட்ஸ்அபில் நாம் யாருக்காவது மெசேஜ் அனுப்பினால் ஒரு டிக் வரும். அது அவர்களிடம் சென்றுவிட்டால் இரண்டு டிக் வரும். அந்த மெசஜை அவர்கள் படித்துவிட்டால் நீல நிற டிக்காக மாறும். இதை வைத்தே இப்போது அந்த பொய்யான தகவல் பரவுகிறது.
3ஆவது டிக்: அதாவது மத்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அளித்த உத்தரவின்படி, இனிமேல் நாம் அனுப்பும் மெசேஜ்களுக்கு 3ஆவது டிக் வந்தால்.. அது சர்ச்சைக்குரிய கருத்து என்றும் இதை மத்திய அரசு நோட் செய்கிறது என்று அர்த்தம் என்றும் தகவல் பரவி வருகிறது. மூன்றாவது டிக் சிவப்பு கலரில் மாறினால் நம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாம்.
ஒரு நீல டிக்கும் இரண்டு சிவப்பு டிக்கும் வந்தால் மத்திய அரசு நமது தரவுகளைக் கண்காணிக்கிறது என்றும் மூன்றுமே சிவப்பு கலரில் வந்தால் மத்திய அரசு நம் மீது நடவடிக்கையைத் தொடங்கிவிட்டது. விரைவில் நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வரும் என்றும் அந்த மெசேஜில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற ஒரு மெசேஜ் கடந்த காலத்திலும் டிரெண்டான நிலையில், இப்போது அது மீண்டும் டிரெண்டனது. இதற்கு மத்திய அரசின் பிஐபி தளமும் விளக்கம் கொடுத்தது.
End to End encryption: இது முழுக்க முழுக்க ஒரு பொய்யான தகவலாகும். ஏனென்றால் வாட்ஸ் அப் தளத்தில் end-to-end encryption என்ற பாதுகாப்பு வசதி இருக்கிறது. அதாவது வாட்ஸ்அப்பில் நாம் அனுப்பும் எந்தவொரு மெசேஜையும் யாராலும் படிக்க முடியாது. இது நாம் யாருக்கு அனுப்புகிறோமோ.. அவர்களுக்கு மட்டுமே தெரியும். வாட்ஸ்அப் நிறுவனத்தால் கூட இவற்றைப் படிக்க முடியாது.
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால்.. வாட்ஸ்அப் மூலம் நாம் அனுப்பும் மெசேஜ் நமது மொபைலை விட்டுச் செல்லும் போது லாக் ஆகி செல்லும். அதற்கான சாவி இந்த மெசேஜை பெறுவோரிடம் மட்டும் தான் இருக்கும். இடையில் யார் நினைத்தாலும்.. வாட்ஸ்அப் நிறுவனமே நினைத்தாலும் அந்த மெசேஜை படிக்க முடியாது. இதைத் தான் end-to-end encryption என்கிறார்கள். இது நமது மொபைலை ஹேக் செய்ய முயல்வோரிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.