Last Updated on: 18th July 2023, 08:44 pm
டோக்கியோ: சரியும் மக்கள்தொகையை அதிகரிக்க ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் முடியாமல் திணறி வரும் நிலையில், அங்குள்ள தனியார் நிறுவனம் இதற்கு மாஸான தீர்வை கண்டுபிடித்துள்ளது.
உலகளவில் இப்போது மூன்றாவது மிகப் பெரிய நாடாக இருப்பது ஜப்பான்.. ஜிடிபி அடிப்படையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இடத்தில் இருக்கிறது.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு ஒரு பிரச்சினை நிலவி வந்தது.
இது அவர்களின் எதிர்காலத்தையே மிகப் பெரிய ஆபத்தில் தள்ளும் வகையில் இருந்தது. உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை தந்த ஜப்பானுக்கு அப்படி என்ன பிரச்சினை வந்தது எனக் கேட்கிறீர்களா… வாங்கப் பார்க்கலாம்.!
மக்கள்தொகை: இந்தியாவில் நமக்கு மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருவது சிக்கலாக இருக்கிறது. இங்கே நாம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனால், ஜப்பானில் இதற்கு நேர்மாறான பிரச்சினை இருக்கிறது. அங்கே கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை தொடர்ந்து சரிந்து வருகிறது.. அங்குக் கடந்த 2014ஆம் ஆண்டில், ஜப்பானின் மக்கள் தொகை 127 மில்லியனாக இருந்தது..
அதன் பிறகு மக்கள்தொகை கணிசமாகச் சரிந்தே வருகிறது.அதாவது ஜப்பான் மக்கள்தொகை வரும் 2040ல் 16% குறைந்து 107 மில்லியனாக இருக்கும் என்றும் அதைத் தொடர்ந்து 2050ல் அது 24% குறைந்து 97 மில்லியனாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் ஜப்பான் என்ற ஒரு நாடே இல்லாமல் போகும் ஆபத்தும் இருக்கிறதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஜப்பான் அரசு: அங்கே ஏற்கனவே வயதானவர்களின் மக்கள்தொகை அதிகரிக்கிறது. இதனால் உழைக்கும் வயதில் இருக்கும் இளைஞர்களின் மக்கள் தொகை குறைகிறது. இவை எல்லாம் சேர்ந்து அந்நாட்டின் பொருளாதாரத்தையே ஆபத்தில் தள்ளுகிறது. இதற்குத் தீர்வாகக் கண்டுபிடிக்க ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வோருக்குச் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.
இருப்பினும், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால் அதை வளர்க்க ஆகும் செலவு என்பது அந்நாட்டு அரசு அளிக்கும் சலுகைகளைக் காட்டிலும் அதிகம் என்று அங்குள்ள இளைஞர்கள் நினைக்கிறார்கள். இதனால் பலரும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதைத் தவிர்க்க ஆரம்பித்துள்ளனர். இதற்குத் தீர்வை காண முடியாமல் ஜப்பான் அரசு திணறி வருகிறது. ஆனால் அங்குள்ள தனியார் நிறுவனம் எடுத்த ஒரு குட்டி நடவடிக்கையால் அங்கே பணிபுரிவோருக்கு அதிகம் குழந்தை பிறக்க ஆரம்பித்துள்ளதாம்.
தனியார் நிறுவனம்: அரசினால் முடியாத ஒன்றை இந்த தனியார் நிறுவனம் எப்படிச் சாத்தியப்படுத்தியது எனக் கேட்கிறீர்களா வாங்கப் பார்க்கலாம். ஜப்பான் எப்போதும் உழைப்பிற்குப் பெயர்போனவர்கள். ஒரு வேலையை எடுத்தால் இரவு எத்தனை மணி ஆனாலும் அதை முடித்துவிட்டுத் தான் கிளம்புவார்களாம். இதில் தான் அவர் சின்ன மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார்.
மசாஹிரோ ஒகாபுஜி என்ற இந்த நபர் இடோச்சு கார்ப்பரேஷன் சிஇஓவாக கடந்த 2010இல் பொறுப்பேற்றார்.ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே அதன் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த அவர், இரவு 8 மணிக்கு மேல் அலுவலகத்தில் வேலை தடை விதித்தார். 8 மணிக்கு மேல் யாராவது ஆபீசில் இருந்தால் அவர்களை வலுகட்டமாயமாக வெளியேற்றிவிடுவார்களாம். இந்த நடைமுறை அவர்களுக்கு கைமேல் பலனைக் கொடுத்துள்ளது. 10 ஆண்டுகளில் நிறுவனத்தின் லாபம் 5 மடங்கு அதிகரித்துள்ளது.
குழந்தை பிறப்பு: லாபம் மட்டுமில்லை. நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களும் அதிகப்படியாக மக்கப்பெறு விடுப்பை எடுத்துள்ளனர். சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் லேட் நைட் வரை வேலை செய்ய வேண்டாம் எனச் சொன்னதால் அதிக பேர் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதேபோன்ற திட்டத்தை ஜப்பான் நாடு முழுக்க அமல்படுத்தினால் மட்டுமே மக்கள் தொகை பிரச்சினைக்குத் தீர்வாக இருக்கும் என்கிறார்கள்.