முழு ஊதியமும் நன்கொடை..ஆப்கன் நிலநடுக்கத்துக்கு நடுவே ரஷீத் கான் சொன்ன வார்த்தை.. நெகிழ்ச்சி

முழு ஊதியமும் நன்கொடை..ஆப்கன் நிலநடுக்கத்துக்கு நடுவே ரஷீத் கான் சொன்ன வார்த்தை.. நெகிழ்ச்சி

Last Updated on: 8th October 2023, 09:16 pm

காபூல்: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2000 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த பெரும் சோகத்துக்கு நடுவே தான் ஆப்கானிஸ்தான் அணியின் வீரரான ரஷீத் கான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களின் மனதை ஈர்த்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. பல நிலநடுக்கங்கள் சக்தி குறைந்து இருப்பதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை.

ஆனால் சில நேரங்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உயிர் பலி வாங்கி வருகிறது. இந்நிலையில் தான் நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் 4.3 மற்றும் 6.3-க்கு இடைப்பட்ட அளவுகளில் தொடர்ச்சியாக 9 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தன. சில இடங்களில் நிலநடுக்கத்தை தாங்க முடியாமல் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.இதனால் வீடுகளில் வசித்து வந்த மக்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கின. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கானவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் கூட நிலநடுக்கத்தில் சிக்கி 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை உலக நாடுகள் செய்ய தொடங்கி உள்ளன. இதற்கிடையே தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான ரஷீத் கான் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‛‛ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணங்களில் (ஹெரத், ஃபரா மற்றும் பத்கிஸ்) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ஏற்பட்டுள்ள துயர சம்பவத்தை அறிந்து மிகுந்த வருத்தப்பட்டேன். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் உலகோப்பை 2023ம் போட்டி சம்பளத்தை நன்கொடையாக வழங்குகிறேன். விரைவில் நிதி திரட்டுவதற்கான பிரசாரத்தையும் தொடங்குவோம்” என தெரிவித்துள்ளார். ரஷீத் கானினின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment