Last Updated on: 14th August 2023, 07:44 pm
லட்சத்தீவு: கர்நாடகாவில் ஹிஜாப் தடை பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியதைபோல், லட்சத்தீவிலும் ஹிஜாபுக்கு தடை விதிக்கும் வகையில் அதன் யூனியன் பிரதேச நிர்வாகம் புதிய சீருடைய விதிகளை அமல்படுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவை அடுத்த அரபிக் கடலில் அமைந்து இருக்கும் அழகிய பகுதி லட்சத்தீவு. யூனியன் பிரதேசங்களில் ஒன்றான இங்கு 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் மலையாளம் பேரும் முஸ்லிம்கள். நாட்டிலேயே மிகவும் அமைதியான பகுதியாக அறியப்படும் இங்கு கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் ரீதியான பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன
இதற்கு காரணம் அங்குள்ள நிர்வாகம்தான். லட்சத்தீவை பொறுத்தவரை அங்கு புதுச்சேரிபோல் தனி முதலமைச்சரோ, துணை நிலை ஆளுநரோ கிடையாது. டாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையு போன்று இங்கும் அட்மினிஸ்ட்ரேடர் (நிர்வாகி) என்ற பொறுப்புதான் உயர் பொறுப்பாக இருக்கும். ஆளுநரை போல் இது ஒரு நியமன பொறுப்பு.
இந்த மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு நிர்வாகியாக இருப்பவர் பாஜகவை சேர்ந்த பிரபுல் கோடா பட்டேல். தீவிர ஆர்.எஸ்.எஸ் அபிமானியான இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு லட்சத்தீவுக்கான நிர்வாகியாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே பிரச்சனை தலைதூக்கத் தொடங்கியது. அங்குள்ள மக்களின் பிரதான உணவாக கருதப்படும் மாட்டிறைச்சிக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் பட்டேலுக்கு எதிராக அம்மாநில மக்கள் போர்க்கொடி தூக்கினர்.
பல்வேறு போராட்டங்கள் அம்மாநிலத்தில் வெடித்தன. இந்த நிலையில் தற்போது புதிய பிரச்சனை அங்கு கிளம்பி இருக்கிறது. அதுதான் ஹிஜாப் தடை. கர்நாடகாவில் கடந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டது தேசிய அளவில் பெரும் பதற்ற நிலையையும், போராட்டங்கள், வன்முறைகளையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், லட்சத்தீவு நிர்வாகம் ஹிஜாபுக்கு மறைமுகமாக தடை விதிக்கும் வகையிலான புதிய சட்டத்தை அறிமுகம் செய்து இருப்பதாக இஸ்லாமியர்கள் குற்றம்சாட்டி உள்ளார்கள். பள்ளிகளுக்கு அணிந்து செல்ல வேண்டிய ஆடைகள், பொருட்கள் குறித்த புதிய சீருடை விதிகளை லட்சத்தீவு நிர்வாகம் வெளியிட்டு உள்ளது
. அதில் ஹிஜாப், முக்காடு போன்றவற்றை அம்மாநில நிர்வாகம் குறிப்பிடவில்லை. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் லட்சத்தீவில் பள்ளி சீருடையுடன் மாணவிகள் தலையில் முக்காடு அணிந்து பள்ளிக்கு செல்வது வழக்கமாக உள்ள நிலையில், அதை இந்த பட்டியலில் சேர்க்காதது அம்மாநில மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
“பள்ளிகளுக்கு சீருடை அணிந்து செல்வது சீரான நிலையை ஏற்படுத்தும். மாணவர்களிடம் ஒழுக்கத்தை உண்டாக்கும். இதில் குறிப்பிடாதவற்றை அணிந்து செல்வது பள்ளி குழந்தைகள் மத்தியில் சீரான நிலையை கெடுக்கும். மாணவர்களிடம் ஒழுக்கத்தை ஏற்படுத்த பொது சீருடை சட்டத்தை பள்ளிகளில் அமல்படுத்துவது கடமை” என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த சுற்றறிக்கை பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கடந்த ஆகஸ்டு 10 ஆம் தேதி சென்று இருக்கிறது.