Last Updated on: 10th November 2023, 08:55 am
தென்கொரியாவில் தொழிற்சாலை ஒன்றில் காய்கறி பெட்டிகளை கன்வேயர் பெல்டில் ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ரோபோ ஒன்று, காய்கறி பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்திருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவிகளை செய்து வருகிறது. இருப்பினும் சில இடங்களில் நடக்கும் கோளாறுகள் காரணமாக அது மனித உயிர்களையே பறித்துவிடுகிறது. அப்படிப்பட்ட சம்பவம்தான் தென்கொரியாவில் நடந்திருக்கிறது. நேற்று தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் நடந்த விபத்தில் மனித உயிர் ஒன்று பலியாகியுள்ளது. இங்கு விவசாய தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. மாகாணம் முழுவதும் இருந்து அறுவடை செய்யப்படும் மிளகுகளில் பெரும்பாலானவை இங்குதான் வருகிறது.
தொழிற்சாலையில் வைத்து அவை தரம் பிரிக்கப்பட்டு, பின்னர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தரம் பிரிக்கும் பணியை தொடக்கத்தில் ஊழியர்கள்தான் செய்துக்கொண்டிருந்தனர். ஆனால் பின்னர் இதற்கென தனியாக ரோபோக்கள் வாங்கப்பட்டன. ஒரு ரோபா மிளகுகளை தரம் பிரித்து பெட்டியில் போடும். இந்த பெட்டிகளை மற்றொரு ரோபோ நகரும் கன்வேயர் பெல்டில் எடுத்து வைக்கும். இப்படி இருக்கையில் நேற்று இந்த ரோபோவை ஊழியர் ஒருவர் பரிசோதித்து பார்த்திருக்கிறார்.
அப்போது மிளகு நிரப்பிய பெட்டியை எடுப்பதற்கு பதில் அருகில் நின்றுக்கொண்டிருந்த ஊழியரை தூக்கி, கன்வேயர் பெல்டில் வைத்து அவரது மார்பையும், முகத்தையும் நசுக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்த ஊழியர் அங்கிருந்து வெளியே வர முடியாமல் கதற, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மற்ற ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை தென்கொரிய செய்தி ஊடகங்கள் உறுதி செய்திருக்கின்றன. இது குறித்து தொழிற்சாலையின் அதிகாரிகள் கூறுகையில், “இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க துல்லியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர். தென்கொரியாவில் ரோபோக்கள் மூலம் இதுபோன்ற விபத்துக்கள் நடப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம், வாகன உதிரிப்பாகங்கள் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ரோபோ அங்குள்ள ஊழியரை கடுமையாக தாக்கியிருக்கிறது.
தொழிற்சாலைகளில் இதுபோன்ற விபத்துக்கள் நடப்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நம்பக தன்மையை கேள்வி எழுப்பி இருக்கிறது. இதனை தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் ரோபோக்களை கடுமையான சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.