Last Updated on: 7th July 2023, 10:23 pm
வாஷிங்டன்: ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்த திரெட்ஸ் – செயலியில் கணக்கு துவங்கி விடலாம் என்றாலும் கணக்கை கிளோஸ் (டெலிட்) செய்வது அவ்வளவு எளிதானதாக இல்லை..அது ஏன் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு கையகப்படுத்தினார். ட்விட்டரை வாங்கியதில் இருந்தே எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரை வாங்கிய கையோடு ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதோடு, பணியாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு… ட்விட்டர் திவால் நிலைக்கு சென்று விடும் இதனால், வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்தார். அதன்படி, ட்விட்டர் புளு வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என சில பிரத்யேக கணக்குகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு வந்த புளு டிக் வசதியை அனைவருக்கும் கொடுக்கப்போவதாக அறிவித்த எலான் மஸ்க், இதற்காக பணம் கட்டினால் போதும் என்ற வசதியை அறிமுகம் செய்தார். அதாவது, மாதம் 8 டாலர் செலுத்தினால் மட்டுமே அனைவருக்கும் ப்ளூ டிக் வழங்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்தது.
இப்படி ட்விட்டர் நிறுவனம் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பதாக அமைந்தது. இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் அண்மையில் எலான் மஸ்க் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். அதில், ஒவ்வொரு பயனரும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பதிவுகளை பார்க்கும் வகையில் மாற்றம் கொண்டு வரப்படும் என அறிவித்தார். அதன்படி ட்விட்டரில் வெரிபைட் பயனர்கள் தினமும் 10,000 பதிவுகளையும், வெரிபைட் இல்லாத பயனர்கள் 1000 பதிவுகளையும், புதியவர்கள் நாள் ஒன்றுக்கு 500 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும். இது ட்விட்டரில் மூழ்கி கிடக்கும் பயனர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்ததது.
இந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய மார்க் சூகர்பெர்க், அப்படியே ட்விட்டரை போலவே ஒரு செயலியை அறிமுகம் செய்தார். திரெட்ஸ் என்ற அந்த செயலி தோற்றத்திலும் பயன்படுத்துவதற்கும் அப்படியே ட்விட்டரை போலவே உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த செயலி இன்று அறிமுகம் செய்யப்பட்ட சில மணி நேரங்களில் கோடிக்கணக்கான பயனர்களை தாண்டிவிட்டது. இன்ஸ்டாகிரம் லாக் இன் விவரங்களை கொண்டு திரெட்ஸ்-இலும் பயனர்கள் லாக் இன் செய்து கொள்ளலாம் என்பதால் பலரும் எளிதாக இதை லாக் இன் செய்தனர்.ட்விட்டருக்கு கடும் போட்டியாக திரெட்ஸ் செயலி இருக்கும் என்றே தெரிகிறது. ஏற்கனவே ட்விட்டரை போல பல செயலிகள் வந்த போதும் ட்விட்டரை அசைத்து பார்க்க முடியாமல் போனது. ஆனால், மெட்டா நிறுவனத்தின் இந்த திரெட்ஸ் செயலி ட்விட்டரை முதல் நாளிலேயே தண்ணீர் குடிக்க வைத்து விட்டது என்றும் சொல்லும் அளவுக்கு பயனர்கள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இதனிடையே, திரெட்ஸ் செயலியில் Sign Up செய்வது எளிதாக இருந்தாலும் அக்கவுண்டை டெலிட் செய்வது என்பது அவ்வளவு எளிது இல்லை.
ஏன் என்றால் திரெட்ஸ் பயனர் தனது புரொபைல் மற்றும் தரவுகளை முழுவதுமாக டெலிட் செய்ய வேண்டும் என்றால் இன்ஸ்டகிராம் பக்கத்தையே டெலிட் செய்ய வேண்டி இருக்கும். இது பயனர்களுக்கு சற்று அதிர்ச்சி கொடுப்பதாக உள்ளது. தற்போது இது துவக்க கட்டத்தில் இருப்பதால் வரும் காலங்களில் திரெட்ஸ் செயலியில் அக்கவுண்ட் டெலிட் செய்ய வேண்டும் என்றால் தற்போது இருக்கும் நடைமுறையில் மாற்றம் வரலாம் என்றும் நெட்டிசன்கள் கூறும் கருத்தாக உள்ளது.