Last Updated on: 21st September 2023, 08:46 pm
பாலி: இஸ்லாமியர்கள் சொல்லும் ‘பிஸ்மில்லா’ என்ற வாக்கியத்தை கூறி பன்றிக்கறி சாப்பிட்டு அதனை வீடியோவாக வெளியிட்ட பெண்ணுக்கு இந்தோனேசியாவில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் லினா முகர்ஜி (33). டிக்டாக் பிரபலமான இவர் அவ்வப்போது வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். டிக்டாக் செயலியில் இவரை ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் லினா முகர்ஜியின் டிக்டாக் பக்கத்தில் கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் லினா முகர்ஜி தனது கையில் பன்றி இறைச்சித் துண்டை வைத்துக் கொண்டிருக்கிறார். சாப்பிடுவதற்கு முன் இஸ்லாமியர்கள் சொல்லும் ‘பிஸ்மில்லா’ என்ற வார்த்தையை சொல்லி அந்த பன்றிக்கறியை லினா முகர்ஜி சாப்பிடுகிறார். ‘பிஸ்மில்லா’ என்பதற்கு அரபியில் ‘இறைவனின் பெயரால்’ என்று அர்த்தம். இந்த வார்த்தையை பயன்படுத்தி இஸ்லாம் மதத்தில் தடை செய்யப்பட்ட உணவான பன்றிக்கறியை லினா முகர்ஜி சாப்பிட்ட வீடியோ அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்க விடுத்துவந்தனர்.
இதனையடுத்து இந்தோனேசிய போலீசாரால் லினா முகர்ஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாலேம்பாங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 250 மில்லியன் ருபையா அபராதமும் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பாலி தீவுக்கு சுற்றுலா சென்றபோது ஆர்வத்தில் அப்படி ஒரு வீடியோவை எடுத்ததாக லினா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.