பதுங்கு குழிகளில் இருக்கிறோம்.. வெளியே அபாயகரமான சத்தம்.. இஸ்ரேல் நாட்டில் கேரளா பெண்கள் கண்ணீர்!

பதுங்கு குழிகளில் இருக்கிறோம்.. வெளியே அபாயகரமான சத்தம்.. இஸ்ரேல் நாட்டில் கேரளா பெண்கள் கண்ணீர்!

Last Updated on: 8th October 2023, 01:54 pm

ஜெருசலேம்: இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோ பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலில் நேற்று காலை தொடங்கி பல முனைத் தாக்குதல் நடைபெற்றது. பாலஸ்தீன ஆயுதக் குழுவினரான ஹமாஸ் படையினர், காஸா முனைவில் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். 2 மணி நேரத்தில் பல பகுதிகளிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் துளைத்தெடுத்தன. இதில் 40க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். சற்றும் எதிர்பாராத ஹமாஸ் பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

ஏவுகணை தாக்குதலோடு நிற்காமல் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். மோட்டார் சைக்கிள்கள், கார்கள், பேரா க்ளைடர்கள் எனப் பலவாறாக இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகள் நுழைந்து, செல்லும் வழிகளில் எல்லாம் தாக்குதல் நடத்தினர். கண்ணில் சிக்கியவர்களை சுட்டுக்கொன்றும், பிணைக் கைதிகளாக தூக்கிச் சென்றும் வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் ராணுவம் ஹமாஸீன் இந்த தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் துரிதமான பதில் தாக்குதலில் ஈடுபட்டது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் நிலைகளை நோக்கி வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஹமாஸ் படையினர் மீது இஸ்ரோ நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீன சண்டையால் காஸா பகுதி முழுக்க மரண ஓலம் கேட்கிறது.

தற்போது தெற்கு இஸ்ரேல் வன்முறையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான கேரள மக்கள் பணிபுரிகின்றனர். அங்கு மருத்துவமனைகளில் நர்ஸ்களாகவும், தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பராமரிப்பாளர்களாகவும் ஏராளமான கேரள பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 6 ஆயிரம் கேரள மக்கள் இஸ்ரேலில் உள்ளனராம். இந்நிலையில் இஸ்ரேல் – பாலஸ்தீன போரினால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் அப்பாவி மக்கள் மீது ஆயுதம் ஏந்திய கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் பற்றிய செய்தி வந்ததுமே கேரளாவின் பல வீடுகளில் பதற்றம் நிலவியது. இஸ்ரேலியில் வசிக்கும் நபர்களைக் கொண்ட வீடுகளில் உள்ளவர்கள் கண்ணீருடன் தங்கள் உறவினர்களுக்கு, பிள்ளைகளுக்கு போன் செய்து பேசி, நிலைமை குறித்துக் கேட்டறிந்தனர். இஸ்ரேலில் வசிக்கும் தங்கள் உறவினர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருமாறு அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர். மீட்பு நடவடிக்கைக்காக இந்திய தூதரகம் கட்டுப்பாட்டு அறையையும் தொடங்கியுள்ளது.பாதுகாப்பு நடவடிக்கையாக கேரளாவைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இஸ்ரேலில் உள்ள பதுங்கு குழிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் முடிவுக்கு வரும் வரை பாதுகாப்பாக பதுங்கு குழிகளில் இருக்க அவர்கள் முடிவு செய்துள்ளனராம். ஆனால், அவர்களிடம் உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் மிகவும் குறைவாகவே உள்ளதாம்.

இஸ்ரேலில் 8 ஆண்டுகளாக நர்ஸ் ஆகப் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த ஷைனி பாபு என்பவர் இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேசுகையில், “இந்தத் தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டது. இஸ்ரேலில் வசிப்பவர்கள் இதற்கு முன்பு பலமுறை தீவிரவாத தாக்குதல்களை அனுபவித்திருந்தாலும் அரசாங்கம் அதை போர் என்று அறிவிப்பது இதுவே முதல்முறை. பாலஸ்தீன ஊடுருவல்காரர்கள் இங்கு வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

தற்போது தெற்கு இஸ்ரேல் வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏராளமான மலையாளிகள் பணிபுரிகின்றனர். நாங்கள் பதுங்கு குழியில் தஞ்சமடைந்துள்ளோம். நான் இப்போது பதுங்கு குழியில் இருந்து பேசுகிறேன். வெளியில் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. என்ங்களிடம் பதுங்கு குழிகளில் சிறிது நேரம் இருப்பதற்கான பொருட்கள் மட்டுமே உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்

Leave a Comment