தர்மன் சண்முகரத்னம் மட்டுமில்லை..வெளிநாடுகளில் உயர்பொறுப்பில் இருக்கும் இந்திய வம்சாவளியினர்! லிஸ்ட்

சென்னை: சிங்கப்பூரின் அதிபராக பொறுப்பேற்க இருக்கும் தமிழரான தர்மன் சண்முகரத்னம், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை குடியரசு தலைவர் கமலா ஹாரிஸ் மட்டும் இன்றி வெளிநாடுகளில் உயர் பொறுப்பில் இருக்கின்ற இந்திய வம்சாவளியினர் யாரெல்லாம் என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள குட்டி நாடு சிங்கப்பூர். சிங்கப்பூரின் அதிபராக உள்ள ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் வரும் செப்டம்பர் 13-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அங்கு அதிபர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் (66) போட்டியிட்டார். அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம் 70 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிக்கனியை பறித்தார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட இங் கொக் சொங் 16 சதவீத வாக்குகளும், டான் கின் லியான் 14 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்மூலம் சிங்கப்பூரின் அடுத்த அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பது உறுதியாகி உள்ளது. சிங்கப்பூரின் அடுத்த அதிபராக உள்ள தர்மன் சண்முகரத்னம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். சிங்கப்பூரில் கடந்த 1957 ஆம் ஆண்டு பிறந்த தர்மன் சண்முகரத்தினத்தின் தந்தை ஒரு தமிழர் ஆவார். தாயார் சீன நாட்டை சேர்ந்தவர்.

ஆங்கிலம், தமிழ், மலாய், மண்ட்ரின் ஆகிய மொழிகளை அறிந்த தர்மன் சண்முகரத்னம் 2001-ம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்பியாக முதல்முதலாக தேர்வானார். இதுவரை நான்கு முறை அங்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் ஆலோசகர்” 2011ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவராக பணியாற்றி உள்ளார். பொருளியல் கொள்கைளை வகுப்பதில் சிங்கப்பூர் பிரதமரின் ஆலோசகராக தர்மன் சண்முகரத்னம் பணியாற்றி உள்ளார்.சிங்கப்பூரில் நிதியமைச்சர், கல்வி அமைச்சராக இருந்தார். சிங்கப்பூரின் துணை பிரதமராகவும் பதவி வகித்தார். சிங்கப்பூரின் அதிபர் பொறுப்புக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழர் ஒருவர் வர இருப்பது பெருமையளிக்கும் விதமாக உள்ளது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை குடியரசு தலைவர் கமலா ஹாரிஸ் வரிசையில் உலக நாடுகளில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் இந்திய வம்சாவளியினர் வரிசையில் தர்மன் சண்முகரத்னமும் இடம்பிடித்துள்ளார்.

இவர்கள் மட்டும் இன்றி வெளிநாடுகளில் உயர் பொறுப்பில் இருக்கின்ற இந்திய வம்சாவளியினர் யாரெல்லாம் என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம். இங்கிலாந்தில் ரிஷி சுனக் அமைச்சரவையில், இந்தியாவின் கோவாவை பூர்வீகமாக கொண்ட சூயல்லா பிரேவர்மன் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அதேபோல், கோவாவை சேர்ந்த கிளேர் கோட்டின்கோ எரிசக்தித் துறை அமைச்சராக உள்ளார். அயர்லாந்து பிரதமர் லியோ எரிக் வரத்கார், போர்ச்சுகல் பிரதமர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோரும் இந்திய வம்சாவளியினர் தான்.

அது மட்டும் இன்றி கனடாவில் அமைச்சர்களாக இருக்கும் அனிதா ஆனந்த், ஹர்ஜித் சஜ்ஜன், கமல் கெரா ஆகியோரும் இந்திய வம்சாவளியினர் தான். இது மட்டும் இன்றி, நியூசிலாந்து அமைச்சர் பிரியங்கா ராதாகிருஷ்ணன், டிரினிடாடு மற்றும் டொபாகோ புதிய அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்காலூ, கயானா அதிபர் முகமது இர்பான் அலி உள்ளிட்டோரும் இந்திய வம்சாவளியினர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இன்னும் பல இந்திய வம்சாவளியினர் உள்ளனர்.

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times