Last Updated on: 2nd September 2023, 08:43 am
சிங்கப்பூர்: தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் அதிபராக பதவியேற்க உள்ளார்.
சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் வரும் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ம்தேதி நடைபெற்றது. தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66), இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மூன்று வேட்பாளர்களும் மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில்ஈடுபட்டனர்.
கடந்த 30-ம் தேதி பிரச்சாரம் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று வாக்குச்சீட்டு நடைமுறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்கள் வாக்களிக்க சிங்கப்பூர் முழுவதும் 1,264 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலையில் 8மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தற்போதைய அதிபர் ஹலிமா அவரது கணவர் முகமதுஅப்துல்லா ஆகியோர் சுங்செங் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், அவரது மனைவி ஹோ சிங் ஆகியோர் கிரசென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளிவாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
சிங்கப்பூர் அதிபர் வேட்பாளர் தர்மன் சண்முகரத்னம், அவரது மனைவி ஜேன் யுமிகோ இட்டோகிஆகியோர் ராபெல்ஸ் மகளிர்தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். சுமார் 27 லட்சம் சிங்கப்பூர் மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மாலை 5 மணிக்குள் 85 சதவீதவாக்குகள் பதிவாகின. சிங்கப்பூர்அதிபர் தேர்தலில் முதல்முறையாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் 10 நகரங்களில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த நாடுகளிலும் நேற்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சிங்கப்பூரில் இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குச்சீட்டுகள் அடங்கிய சிறப்புபெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்று இரவு 10 மணி அளவில் வெளியிடப்பட்டன.
இதன்படி தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 70 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இங் கொக் சொங் 16 சதவீத வாக்குகளும், டான் கின் லியான் 14 சதவீத வாக்குகளும் பெற்றனர். இதன்மூலம் சிங்கப்பூரின் அடுத்த அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாரபூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
தர்மன் சண்முகரத்னம் யார்?: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தர்மன் சண்முகரத்னம் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இலங்கையை பூர்விகமாகக் கொண்ட அவர் கடந்த 2001-ம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் பதவி வகிக்கிறார். தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் ஆளும் மக்கள் செயல் கட்சியின் ஆதரவு பெற்றவர் ஆவார்.