Last Updated on: 8th September 2023, 08:36 pm
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தோனி, தற்போது உலக நாடுகளை சுற்றிப்பார்த்து வருகிறார். கிரிக்கெட் மட்டுமல்லாமல் கால்பந்து, பாட்மிண்டன், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளிலும் கைத்தேர்ந்தவர் ஆவார்.அந்த வகையில், தற்போது உலக அளவில் நடக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தோனி நேரில் சென்று கண்டு ரசித்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை அவர் பார்வையிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவின.
இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் தோனி ஓய்வு நேரங்களில் கோல்ப் விளையாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி, இன்று கோல்ப் விளையாடிக் கொண்டிருந்த போது முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அங்கு எதேச்சையாக வந்துள்ளார். அவரை பார்த்த தோனி மரியாதை நிமித்தமாக ட்ரம்ப்பை சந்தித்து பேசினார். அப்போது தோனியை கட்டி அணைத்த ட்ரம்ப், அவரிடம் மிகவும் அன்பாக பேசினார்.
அப்போது கோல்ப் விளையாட்டின் சில நுணுக்கங்களை ட்ரம்புக்கு தோனி கற்றுத் தந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.