Last Updated on: 30th November 2023, 11:01 am
சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை கடுமையாக போராடி மீட்ட இந்தியாவின் விடா முயற்சிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ இந்திய அதிகாரிகள் அற்புதமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர். சுரங்கப் பணியாளர்களை மீட்க களத்தில் நின்று அயராது போராடியதில் ஆஸ்திரேலிய பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் பங்களிப்பை பெருமையாக கருதுகிறேன் என்று அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பிலிப் கிரீன் கூறியதாவது: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா-பர்கோட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியை வெற்றிகரமாக மேற்கொண்ட இந்திய அதிகாரிகளின் சாதனை மகத்தானது. எண்ணற்ற சவால்களைச் சந்தித்து இரண்டு வாரங்களாக சுரங்கத்தின் அருகே முகாமிட்டு மீட்புப் பணியை தொடர்ந்து கண்காணித்து நிறைவேற்றியதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்கப்பாதை நிபுணரான பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது இந்த செயல் பெருமை கொள்ளத்தக்கது. இவ்வாறு பிலிப் கிரீன் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 12-ம் தேதி தீபாவளியன்று உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதை திடீரென இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 17 நாட்கள் கடுமையான போரட்டத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.