Last Updated on: 29th September 2023, 02:53 pm
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் பகுதியில் அமைந்துள்ளது பாண்ட்ஸ் என்ற பகுதி. இங்கு ஜம்மித் என்பவர் குடும்பத்துக்கு சொந்தமாக 1.99 ஹெக்டேர் நிலம் உள்ளது. பசுமையாக காட்சியளிக்கும் இந்த நிலத்தின் நடுவே 5 படுக்கையறை வீட்டில் ஜம்மித் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களின் நிலத்தை சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் வீடுகளாக காட்சியளிக்கின்றன. அதற்கு நடுவே நிலத்துடன் காட்சியளிக்கும் ஒரே வீடு ஜம்மித் வீடுதான்.
இதனால் ஜம்மித் குடும்பத்தினர் நிலத்தின் மீது ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு ஒரு கண். எப்படியாவது ஜம்மித் குடும்பத்தினரின் நிலத்தை வாங்கி அங்கு வீடுகளை கட்டி விற்க வேண்டும் என ரியல் எஸ்டேட் அதிபர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக 30 மில்லியன் டாலர் (ரூ.249 கோடி) வரை விலை கொடுக்க ரியல் எஸ்டேட் அதிபர்கள் சமீபத்தில் முன்வந்தனர். ஆனாலும், தங்கள் நிலத்தை விற்க ஜம்மித் குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
இது குறித்து இப்பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட் டெய்லர் பிரடின் கூறுகையில், ‘‘இப்பகுதியில் உள்ளவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலங்களை விற்றுவிட்டனர். ஆனால் ஜம்மித் குடும்பத்தினர் மட்டும் நிலத்தை விற்காமல் வைத்துள்ளனர். அவர்கள் நிலத்துக்கும் மிகப்பெரிய தொகை கொடுக்க முன்வந்தும், அவர்கள் நிலத்தை விற்க மறுக்கின்றனர்
இது குறித்து ஜம்மித் குடும்பத்தை சேர்ந்த டையானே ஜம்மித் கூறுகையில், ‘‘ஒரு காலத்தில் இந்த பகுதி முழுவதும் விவசாய பகுதியாக இருந்தது. இங்கு பண்ணை வீடுகள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது இங்கு நிலப் பகுதியை பார்க்க முடியவில்லை. எங்கும் வீடுகளாக உள்ளன’’ என வேதனையுடன் கூறினார்.