Last Updated on: 20th October 2023, 09:22 pm
தமிழகத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் நடராஜன் என்பவர் எமிரேட்ஸ் டிராவின் FAST5 ரேபிளில் வென்று 25 ஆண்டுகளுக்கு 25,000 திர்ஹம் ரொக்கத்தைப் பெறும் அதிர்ஷ்டஷாலியாக மாறியுள்ளார். இந்த வெற்றியின் மூலம், அமீரகத்திற்கு வெளியே கிராண்ட் பரிசை வென்ற முதல் வெற்றியாளர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
இந்த மிகப்பெரிய வெற்றி குறித்து வெற்றியாளர் மகேஷ் விவரிக்கையில், டிராவில் ஐந்து எண்களையும் பொருத்தியுள்ளேன் என்பதை செயலியில் சரிபார்த்தபோது, நம்ப முடியாமல் இருந்ததாகவும், பின்னர் எமிரேட்ஸ் டிராவில் இருந்து அழைப்பு வந்ததும் அதை நம்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் உள்ள ஆம்பூரில் திட்ட மேலாளராக பணிபுரியும் மகேஷ் குமாருக்கு வயது 49. இவர் முன்னதாக, 2019 முதல் இந்த ஆண்டின் தொடக்கம் வரை சவுதி அரேபியாவில் நான்கு ஆண்டு பணி புரிந்துள்ளார். இவ்வாறான சூழலில், துபாய்க்கு பயணம் செய்யும் போது, பிரபலமான டிராக்களைப் பற்றி அறிந்து கொண்ட இவர், போட்டியில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார்.
மேலும், இந்த வெற்றியில் தனக்கு கிடைக்கும் தொகையை தனது இரண்டு மகள்களின் கல்விக்காக செலவு செய்யப் போவதாகவும், குடும்பத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக முதலீடு செய்யப்போவதாகவும் கூறிய மகேஷ், இது என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான மற்றும் மறக்கமுடியாத நாட்களில் ஒன்றாக மாறியது என்று நெகிழ்ந்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், எமிரேட்ஸ் டிரா அதன் பவளப்பாறை மறுசீரமைப்பு திட்டத்துடன் (Coral Reef Restoration Programme) ஒரு சிறந்த விளைவை ஊக்குவிக்கிறது என்பதை பாராட்டுவதாகவும் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எமிரேட்ஸ் டிராவின் நிர்வாகக் கூட்டாளியான முகமது பெஹ்ரூஜியன் அலாவதி அவர்கள் பேசுகையில், இவ்வளவு குறுகிய இடைவெளியில் மற்றொரு கிராண்ட் பரிசு வெற்றியாளரைக் கொண்டிருப்பது கிராண்ட் பரிசுகளை வழங்குவதில் FAST5 இன் இணையற்ற வேகத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.