Last Updated on: 9th July 2023, 07:18 pm
கேனரி தீவில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்திற்குள் இருந்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 9.5 கிலோ மிதக்கும் தங்கம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
திமிங்கலத்தின் குடலில் மிதக்கும் தங்கம்
கேனரி தீவின் லா பால்மாவில் உள்ள கடற்கரையில் ஸ்பேர்ம் திமிங்கலம் (Sperm whale) ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. இதையடுத்து இறந்த திமிங்கலத்தை லா பால்மா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பிரேத பரிசோதனை செய்தனர்.
அப்போது திமிங்கலத்தின் குடல் பகுதியில் இருந்து 9.5 கிலோ எடையுள்ள அம்பர்கிரிஸ் வெளியே எடுக்கப்பட்டது. அம்பர்கிரிஸ்(ambergris) என்பது கடலில் மிதக்கும் தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
தற்போது திமிங்கலத்தின் குடல் பகுதியில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட 9.5 கிலோ எடையுள்ள மிதக்கும் தங்கத்தின் மதிப்பு சுமார் 250,000 அமெரிக்க டொலர் அல்லது கிட்டத்தட்ட 2 கோடி மதிப்பாகும்.
இந்நிலையில் மிதக்கும் தங்கம் என அழைக்கப்படும் இந்த அம்பர்கிரிஸ் பொருளானது இறந்த திமிங்கலத்தின் குடல் பகுதியில் அடைப்பு ஏற்படுத்தியதை தொடர்ந்து செரிமான சிக்கல் அவதிப்பட்டு வந்த திமிங்கலம் இறுதியில் இறந்து கடலில் கரை ஒதுங்கி இருப்பதாக லாஸ் பால்மாஸ் பல்கலைக்கழகத்தின் விலங்கு ஆரோக்கியம் மற்றும் உணவு பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் அன்டோனியோ பெர்னாண்டஸ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் கடுமையான கடல் அலைகள் காரணமாக பிரேத பரிசோதனை மிகவும் கடுமையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மிதக்கும் தங்கம் அல்லது அம்பர்கிரிஸ் என்றால் என்ன?
இந்த அம்பர்கிரிஸ் பொருளானது, 100 ஸ்பேர்ம் திமிங்கலங்களில் இருந்து ஒன்றில் உருவாக்கப்படுகிறது, பொதுவாக திமிங்கலங்கள் அதிக அளவில் ஸ்க்விட் மற்றும் கட் ஃபிஷ் போன்றவற்றை சாப்பிடுகின்றன.
இவை பெரும்பாலும் செரிமானம் ஆவது இல்லை, இவ்வாறு செரிமானம் ஆகாத பொருட்கள் பெரும்பாலான நேரங்களில் திமிங்கலங்களால் வாந்தி எடுக்கப்பட்டு விடுகின்றன.
ஆனால் சில சமயங்களில் இவை திமிங்கலங்களின் வயிற்றில் பல ஆண்டுகளாக தங்கி அவற்றின் குடலில் இந்த அம்பர்கிரிஸாக உருமாறுகின்றன.
இந்த அம்பர்கிரிஸும் சில நேரங்களில் திமிங்கலத்தின் குடலில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுகின்றன, இவை கடலில் மிதப்பதால் இவற்றை மிதக்கும் தங்கம் என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர்.ஆனால் சில நேரங்களில் இவை திமிங்கலத்தின் வயிற்றில் பெரிதாக வளர்ந்து குடலில் அடைப்பை ஏற்படுத்தி திமிங்கலத்தின் இறப்புக்கு முக்கிய காரணமாகவும் ஆகிவிடுகிறது.
வாசனை திரவ தொழிற்சாலைகளின் பொக்கிஷம்
இந்த மிதக்கும் தங்கம் அல்லது அம்பர்கிரிஸ் பொருளானது வாசனை திரவ உற்பத்தி தொழிற்சாலைக்கு பெரிதும் பயனுள்ள பொருளாக உள்ளது.
வாசனை திரவ தொழிற்சாலைகள் இந்த அம்பர்கிரிஸ் பொக்கிஷமாக பார்க்கின்றன, ஏனென்றால் இவை நல்ல மணம் கொண்டவை என்பதுடன், வாசனை திரவங்களை நீண்ட நாட்கள் நீடிக்க கூடியதாக செய்கிறது.