Last Updated on: 11th August 2023, 10:22 am
டைட்டானிக் கப்பல் மூழ்கப்போகும் தறுவாயில், முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் படகுகளில் மீட்கப்பட்டனர். அத்தகைய படகில் ஒரு பெண், ஒரு சிறிய குழந்தை மற்றும் ஒரு நபர் அமர்ந்திருந்தனர்.
படகை தண்ணீரில் செலுத்தும் முன், ஒரு அதிகாரி, ” வேறு பெண் பயணிகள் யாராவது இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
யாரும் முன்வரவில்லை.
“பெண்கள் யாராவது இருக்கிறீர்களா?” என்று மற்றொரு அதிகாரி கத்தினார்.
கப்பலின் மேல் தளத்திலிருந்து ஒரு பெண் வந்து, “நான் இந்தக் கப்பலில் பயணிக்கவில்லை. நான் இதில் பணியாற்றி வருகிறேன்,” என்றார்.
அந்த அதிகாரி அவளை ஒரு கணம் பார்த்துவிட்டு, “பரவாயில்லை, நீ ஒரு பெண், உனக்கு படகில் இடம் இருக்கிறது, வா,” என்று அழைத்தார்.
அந்தப் பெண்ணின் பெயர் வயலட், கடைசி நேரத்தில் அதிர்ஷ்டம் அடித்தது.
ஒரு லைஃப் படகில் அவளுக்கு ஒரு இடம் கிடைத்தது. மூழ்கிக்கொண்டிருந்த டைட்டானிக் கப்பலில் இருந்து அவர் உயிர் பிழைத்தார்.
சுவாரஸ்யம் என்னவெனில், ஒரு கப்பல் விபத்திலிருந்து இருந்து அவர் உயிர் பிழைப்பது அது முதல் முறை அல்ல, கடைசியாகவும் இருக்காது.
டைட்டானிக் விபத்து
டைட்டானிக் விபத்து ஏப்ரல் 1912-ல் நடந்தது.
அதற்கு ஒரு வருடம் கழித்து ‘தி ட்ரூத் அபௌட் டைட்டானிக்’ என்ற புத்தகத்தை வெளிவந்தது.
டைட்டானிக்கில் பயணித்தக் கறுப்பின மக்கள் வயலட்டுக்கு லைஃப் படகில் இடம் தருமாறு கப்பல் அதிகாரிகளிடம் கேட்டதாக இந்நூலில் சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயலட் ஜெஸாப் என்ற இந்தச் செவிலியர், வரலாற்றில் ‘மூழ்காத மங்கை’ (Miss Unsinkable) அல்லது மூழ்கும் கப்பல்களின் ராணி (The Queen of Sinking Ships) என்று அழைக்கப்படுகிறார்.
வயலட் பெரிய கப்பல்களில் செவிலியராகப் பணிசெய்தார். கப்பல்கள் மூழ்கினாலும், அவர் எப்படியாவது பிழைத்துவிடுவார். இது அவரது அதிசயக் கதை.
யார் இந்த வயலட் ஜெஸாப்?
ஜான் மைக்ஸ்டன் கிரஹாம் எழுதிய வயலட்டின் வாழ்க்கை வரலாறு 1998-ல் வெளியிடப்பட்டது.
இந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு, டைட்டானிக் விபத்தில் மட்டுமல்ல, மூன்று பெரிய கப்பல் விபத்துகளிள் அவர் தப்பிப்பிழைத்ததை உலகம் அறிந்தது.
வயலட் அர்ஜென்டினாவில் குடியேறிய ஐரிஷ் குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்தவர். சிறுவயதிலேயே தனது ஆறு உடன்பிறந்தவர்களை வளர்க்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். வயலெட்டின் தந்தை அவரது இளம் வயதிலேயே இறந்துவிட்டார்.
அந்த நேரத்தில், வயலட்டின் தாய் கப்பல்களில் செவிலியராக பணிபுரிந்துவந்தார். சில காலம் கழித்து அவரது தாயும் நோய்வாய்ப்பட்டு இறந்தார். வயலட் 21 வயதில் கப்பல்களில் வேலை செய்யத் தொடங்கினார். கப்பல்களில் பயணிக்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை வழங்கும் பணி செய்தார். மேலும், கப்பலில் உள்ள பயணிகளின் அறைகளைச் சுத்தம் செயுய்ம் பணியையும். நாற்பது வருடங்கள் அவர் கப்பல்களில் வேலை செய்தார், பல சிரமங்களை எதிர்கொண்டார்.
இந்த சம்பவம் குறித்துப் பேசும் வயலட், ”ஒரு நிமிடம் முழு அமைதி நிலவியது. சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது. திடீரென்று பலத்த சத்தம் கேட்டது. அதை நான் மறக்கவே மாட்டேன். எங்கள் கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது. ஒரு அதிகாரி என்னிடம் ஒரு குழந்தையைக் கொடுத்து, ஒரு படகில் ஏறச் சொன்னார். அங்கு இருந்தக் குழப்பத்தில் குழந்தையின் தாயை எங்களால் அடையாளம் காண முடியவில்லை,” என்கிறார்.
விபத்துக்குப் பிறகு லைஃப் படகுகளில் இருந்தவர்களை மற்றொரு கப்பல் மீட்டு நியூயார்க்கிற்கு கொண்டு வந்ததாக வயலட் சொல்கிறார். நியூயார்க்கிற்கு வந்த பிறகு, அந்தப் பெண் குழந்தையை கைகளில் பிடித்துக்கொண்டு எதுவும் பேசாமல் அழுதுகொண்டே நடந்து சென்றதாக அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வளௌ பெரிய கடல் விபத்தில் சிக்கியவர்கள் கப்பலில் பயணம் செய்வதை முற்றிலுமாக நிறுத்தியிருப்பார்கள். ஆனால், வயலட் அப்படிச் செய்யவில்லை.
டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு ஒரு வருடம் முன்பு, மற்றொரு கப்பல் மூழ்கியது. அந்தக் கப்பலிலும் வயலட் இருந்தார்.
ஒலிம்பிக் கப்பல் விபத்து
டைட்டானிக் கப்பலை ஒயிட் ஸ்டார்லைன் நிறுவனம் இயக்கியது. டைட்டானிக்கிற்கு முன்னர் விபத்துக்குள்ளான ஒலிம்பிக் கூட அதே நிறுவனத்தின் கப்பல்தான். இது டைட்டானிக் கப்பலுக்கு முன் உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக இருந்தது.
1911-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி ஒலிம்பிக் கப்பல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் கடற்கரையிலிருந்து புறப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு அது பிரிட்டிஷ் போர்க்கப்பலான எச்.எம்.எஸ் ஹாக் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், ஒலிம்பிக் கப்பல் மோசமாக சேதமடைந்தது.
விபத்துக்குப் பிறகு ஒலிம்பிக் கப்பல் கரைக்கு கொண்டு வரப்பட்டது. சில நாட்கள் பழுதுபார்க்கப்பட்ட பிறகு, ஒலிம்பிக் மீண்டும் கடலில் பயணம் செய்யத் துவங்கியது.
வயலட் 8 மாதங்கள் ஒலிம்பிக் கப்பலில் பணிபுரிந்தார். பின்னர் டைட்டானிக்கிற்கு மாற்றப்பட்டார்.
டைட்டானிக் பேரழிவிற்குப் பிறகு, வயலட் தனது வாழ்க்கையில் முடிந்தவரை பலரைக் காப்பாற்ற முடிவு செய்தார். இதற்காகவே செவிலியராகப் பயிற்சி பெற்றார்.
1916-ல் டைட்டானிக் மூழ்கிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, வயலட் பிரிட்டிஷ் செஞ்சிலுவைச் சங்கத்தில் செவிலியராகப் பணியாற்றத் தொடங்கினார்.
முதலாம் உலகப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த சமயம் அது. பல விமானங்கள் துருப்புக்களைக் கொண்டு செல்லவும், காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவமனைகளாகவும் பயன்படுத்தப்பட்டன.
அதேபோல் ஒயிட் ஸ்டார் நிறுவனத்தின் பிரிட்டானிக் கப்பலும் நடமாடும் மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
போர் காரணமாக கடலில் பல இடங்களில் கண்ணிவெடிகள் வீசபட்டன. அப்படிப்பட்ட ஒரு வெடி வெடித்து பிரிட்டானிக் கடலில் மூழ்கியது. அந்த அனுபவம் வயலட்டுக்கு இன்னும் பயங்கரமாக இருந்தது.
அந்த அனுபவத்தைப் பற்றி வயலட் கூறுகையில், “என்னை யாரோ ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டதைப் போல உணர்ந்தேன். என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. எப்படியோ தண்ணீருக்க்கு மேல் வந்து மூச்சு விட முயன்றேன். என் மூக்கிலும் வாயிலும் தண்ணீர் சென்றது,” என்றார்.
இந்த கப்பலில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளில் 32 பேர் உயிரிழந்தனர். விபத்தித்குப் பிறகும், கப்பலை ஓட்டும் ப்ரொப்பல்லர்கள் நிற்கவில்லை. மேலும், அவை கப்பலில் இருந்தவர்களை தங்களை நோக்கி இழுத்து, அவர்கள் மீது மோதியதில், மக்கள் துண்டாகி இறந்தனர்.
டைட்டானிக் பேரழிவிற்குப் பிறகு, ஒவ்வொரு கப்பலிலும் போதுமான உயிர்காக்கும் படகுகள் இருக்க வேண்டும் என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டது. பிரிட்டானிக் கப்பலில் இருந்த இரண்டு உயிர்காக்கும் படகுகள் இருந்தன.
பிரிட்டானிக் கப்பலின் ஒரு லைஃப் படகில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். சுவாரஸ்யமாக அந்த மூவரும் டைட்டானிக் விபத்தில் இருந்து தப்பியவர்கள். அவர்கள் வயலட், ஆர்ச்சி ஜுவல், மற்றும் ஜான் ப்ரீஸ்ட்.
ஆர்ச்சி ஜுவல் தனது சகோதரிக்கு எழுதிய கடிதத்தில், ஒரு ப்ரொப்பல்லர் அவர்களின் லைஃப் படகை தன்னை நோக்கி இழுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.அந்த லைஃப் படகில் வயலட்டும் இருந்தார். ஆபத்தை உணர்ந்த அவர், உடனடியாக படகில் இருந்து தண்ணீரில் குதித்தார். இதன் மூலம் கப்பலின் ப்ரொப்பல்லரில் சிக்குவதிலிருந்து தப்பித்தார். அதே சமயம் கப்பலில் இருந்து பிய்ந்து வந்த ஒரு பெரிய மரத்துண்டு அவரது தலையில் மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.
இந்த முறையும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருந்தது. சரியான நேரத்தில் மற்றொரு லைஃப் படகு வந்து அவளை தண்ணீரில் இருந்து வெளியே இழுக்க அவர் உயிர் பிழைத்தார்.மூன்று முறையும் வயலட் தாம் இறக்கப் போவதாக நினைத்தார். ஆனால், பிழைத்துக்கொண்டார்.1920-ல் அவர் மீண்டும் ஒயிட் ஸ்டார்லைனில் பணியாற்றத் தொடங்கினார்.மூன்று முறை கடலில் மரணம் அவரை நெருங்கி வந்தும், அவர் கடல் பயணத்தை விடவில்லை.40 ஆண்டுகள் கடற்படைக் கப்பல்களில் பணியாற்றி, தனது 62 வயதில் ஓய்வு பெற்றார் வயலட். 1971-ம் ஆண்டு தனது 83வது வயதில் காலமானார்.