Last Updated on: 6th July 2023, 07:46 pm
குறைந்த கார்போ உணவுமுறை என்பது இன்டர்மிட்டண்ட் விரதம் தொடங்கி பேலியோ, கீட்டோ, வேகன் டயட் என எல்லா வகையான டயட்டுகளிலும் அடிப்படையான விஷயமாக இருக்கிறது. குறைந்த கார்போஹைட்ரேட் என்றதுமே அரிசி, கோதுமை உணவுகளை தவிர்க்கிறோமே தவிர பழங்களிலும் சிலவற்றில் குறைந்த கார்ப்ஸ் இருக்கிறது, சிலவற்றில் அதிகமாக இருக்கிறது. அதிலும் கவனம் செலுத்த வேண்டும். வாங்க… அப்படி என்ன பழம் சாப்பிடலாம், என்ன பழம் சாப்பிட கூடாது என்று பார்த்திடலாம்.
குறைந்த கார்போ (low carb diet) உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தொடங்கி, நீரிழிவு, இதயப் பிரச்சினை உள்ளவர்கள் வரை பெரும்பாலானோர் தேர்வு செய்யும் ஒரு டயட் முறையாக இருக்கிறது. இந்த டயட்டில் பெரும்பாலும் லோ – கார்ப் என்றதும் அரிசி, கோதுமை உள்ளிட்ட மாவுப் பொருள்களை குறைவாக எடுத்துக் கொள்வதில் மட்டும் கவனம் செலுத்துகிறோம். ஆனால் கார்போஹைட்ரேட் அதிகம் கொண்ட பழங்களை பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.
பெர்ரீஸ்:
பெர்ரி வகை பழங்களில் ஸ்டிராபெர்ரி, ராஸ்பெர்ரி, பிளாக் பெர்ரீஸ், ப்ளூபெர்ரீஸ் போன்ற பழ வகைகளில் கார்போஹைட்ரேட் அளவு மிகக் குறைவு. அவற்றை நீங்கள் தாராளமாக லோ – கார்ப் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். அதோடு இதில் வைட்டமின் சி மற்றும் அதிகப்படியான நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
அவகேடோவில் கார்போஹைட்ரேட் அளவு மிக மிகக் குறைவு.
அதேசமயம் ஆரோக்கியமான கொழுப்பு இதில் அதிகம். அதுமட்டுமா! உடலுக்குத் தேவையான மினரல்களான பொட்டாசியம், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, வைடட்டமின் கே ஆகியவை அதிகமாக இருக்கின்றன.
தக்காளி பழத்தில் கார்போ ஹைட்ரேட் மிக மிகக் குறைவு. ஆனால் லைகோபின், வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் மிக அதிகமாக இருக்கின்றன.
அதனால் லோ – கார்ப் டயட்டில் இருப்பவர்கள் தக்காளியை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.சிட்ரஸ் வகை பழங்களில் கார்போ அளவு குறைவாக இருக்கும். அதிலும் எலுமிச்சை பழத்தில் கார்போஹைட்ரேட் அளவு மிக மிகக் குறைவு.நம்முடைய உணவுக்கும் நல்ல வாசனை , சுவை, பிளேவர்களை கொடுக்கக்கூடிய இந்த எலுமிச்சை பழத்தை தாராளமான லோ – கார்ப் டயட்டில் சேர்க்கலாம்.
பொதுவாக டயட்டில் இரு்பவர்கள் தேங்காயில் கொழுப்பு இருக்கிறது என்று தவிர்த்து விடுவார்கள். ஆனால் அதில் உள்ள ஆரோக்கியான கொழுப்பு அமிலங்கள் தான்.அதேசமயம் தேங்காய் மற்றும் தேங்காய்ப்பால் இரண்டிலுமே கார்போ ஹைட்ரேட் அளவு மிக மிகக் குறைவு.
வாழைப்பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் மிக அதிகம். இதில் பொட்டாசியம், வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் சர்க்கரையும் கார்ப்ஸ் – ம் அதிகம் என்பதால் தவிர்ப்பது மிக நல்லது.
திராட்சையில் வைட்டமின் சி இருப்பதால் புளிப்புச் சுவையுடன் இருக்கிறதே தவிர, அதில் இயற்கையாகவே சர்க்கரையும் கார்போஹைட்ரேட்டும் மிக அதிகம்.அதனால் லோ – கார்ப் டயட் இருப்பவர்கள் திராட்சை பழத்தை தவிர்ப்பது நல்லது.
அன்னாசி பழத்தில் இயற்கையாகவே சர்க்கரையும் கார்போ ஹைட்ரேட்டும் மிக அதிகம். அதுமட்டுமின்றி கலோரிகளும் அதிகம் என்பதால் லோ – கார்ப் டயட்டில் அன்னாசியை தவிர்ப்பது நல்லது.
ஆரஞ்சு பழம் மற்றும் ஆரஞ்சு சாறில் வைட்டமின் சி அதிகமாக இருக்கின்றது. ஆனாலும் இதில் இயற்கையாகவே சர்க்கரையும் கார்போஹைட்ரேட்டும் மிக அதிக அளவில் இருக்கிறது.குறைந்த கார்போ டயட்டை பின்பற்றுகிறவர்கள் ஆரஞ்சு பழத்தை தவிர்ப்து நல்லது.
ஆப்பிளில் நிறைய ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்துக்களும் இருக்கின்றன. அதேசமயம் கலோரிகள் குறைவு.அதனால் ஆப்பிளை லோ – கார்ப் டயட்டில் இருப்பவர்கள் மிதமான அளவில் மட்டும் சேர்த்துக் கொள்வது நல்லது. முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.