Last Updated on: 14th May 2023, 08:16 pm
திப்தூர்: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடையை கொண்டு வந்த பாஜகவின் கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் திப்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தார்.
கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் 36 மையங்களில் எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் 114 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில் கர்நாடகா மற்றும் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.கர்நாடகாவில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய விவகாரம் ஹிஜாப் தடை. இத்தடையை கொண்டு வந்த கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் இந்தத் தேர்தலில் தோல்வியை சந்தித்திருக்கிறார்.
திப்தூர் தொகுதியில் போட்டியிட்ட பி. சி. நாகேஷ் 53,754 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் ஷாதக் ஷாரி 71, 415 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.ஹிஜாப் தடை விவகாரத்தில் முஸ்லிம் சிறுபான்மையின மாணவிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் கர்நாடக அரசு அதன் முடிவில் பின்வாங்காமல் இருந்ததது. இந்த நிலையில் பி. சி. நாகேஷ்தோல்வி அடைந்திருக்கிறார்.