Last Updated on: 9th February 2024, 08:52 pm
இன்றைய நவீன காலத்தில் இருக்கும் பல்வேறு விதமான ஸ்மார்ட் ஃபோன்களின் முன்னோடியாக இருந்தது ஆப்பிள் நிறுவன ஐபோன் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த பிறகுதான், பல நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் சந்தையில் கால் வைக்க ஆரம்பித்தன.
பின்னர் ஸ்மார்ட்போனின் வளர்ச்சியானது பல்வேறு கட்டங்களை அடைந்து இப்போது மடிக்கக் கூடிய அளவிலான ஸ்மார்ட் ஃபோன்கள் அதிக அளவில் வருகிறது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் மட்டும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாதனங்களை ஏன் உருவாக்க முயற்சிக்கவில்லை? என பலருக்கும் சந்தேகம் இருந்து வந்த நிலையில், அந்த சந்தேகம் இப்போது தீர்ந்துவிட்டது. அதாவது, ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் ஃபோன்களை உருவாக்கப் போகிறது என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, இன்னும் சில ஆண்டுகளில் மடிக்கக்கூடிய ஆப்பிள் ஐபோன்கள் விற்பனைக்கு வரும் என நம்பப்படுகிறது.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்பிளின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புரோட்டோடைப் தயாரிப்பு, ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தது. குறிப்பாக மடிக்கக்கூடிய ஐபோன் டிசைன், சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் மாடல்களைப் போலவே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த மொபைல்கள் இரண்டு டிசைன்களில் உருவாக்கப்படுகிறதாம். இந்த அறிவிப்பின் மூலமாக ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன்களை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் அறிக்கையில், மடிக்கக்கூடிய ஐபோனின் திக்னஸ், சாதாரண ஐபோனைவிட பாதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இவர்கள் சொல்வது உண்மை என்றால், foldable ஸ்மார்ட்போனில் இது மிகப்பெரிய புரட்சியாக இருக்கும்.
மேலும் இந்த ஐபோனில் உள்பக்க ஸ்கிரீனுடன் சேர்த்து வெளிப்பக்கமாகவும் ஸ்கிரீன் இருக்குமாம். இந்த ஐபோனின் பெரும்பாலான டிசைன் முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், அதன் பேட்டரி மற்றும் டிஸ்ப்ளே தொடர்பான டிசைனில் சில சவால்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பொதுவாகவே சராசரி போன்களை விட மடிக்கக்கூடிய ஃபோன்களை பராமரிப்பது கஷ்டமாக இருப்பதாலும், ஆப்பிள் நிறுவன பொருட்கள் எப்போதுமே தரமாக இருக்க வேண்டும் என நிறுவனம் நினைப்பதாலும், ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வடிவமைத்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். கூடுதல் தகவலாக இந்த மடிக்கக் கூடிய சாதனத்தை தயாரிப்பதற்கான பாகங்களை ஏசியன் மேனுஃபேக்சர்ஸ் என்ற நிறுவனத்திடம் ஆர்டர் செய்துள்ளதாகவும், ஒருவேளை எதிர்பார்க்கும் தரத்தில் அவற்றின் பாகங்கள் வரவில்லை என்றால், இந்தத் திட்டத்தையே ஆப்பிள் நிறுவனம் கைவிடும் வாய்ப்புள்ளது.
எதுவாக இருந்தாலும் இதுகுறித்த உண்மை தகவல்கள் இன்னும் சிறிது காலங்களில் வெளிவந்துவிடும் என நாம் எதிர்பார்க்கலாம்.