7.9 C
Munich
Monday, October 7, 2024

கீரைகளில் எத்தனையோ இருக்க, இவற்றில் மட்டும் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

கீரைகளில் எத்தனையோ இருக்க, இவற்றில் மட்டும் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Last Updated on: 13th February 2024, 10:59 pm

கீரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான மருத்துவப் பலன்களைக் கொண்டது. அதனால்தான், ‘கீரைகள் நம் வீட்டு மருத்துவப் பெட்டி’ என்கிறார்கள். கீரைகளின் மருத்துவ குணங்கள் தெரியாததால் பலர் இவற்றைப் பயன்படுத்துவது இல்லை. அம்மாதிரியான சில கீரைகளின் ஸ்பெஷல் குணங்களைப் பார்க்கலாம்.சர்க்கரவர்த்திக் கீரை: கீரைகளில் நிகரற்ற கீரை எனப் பெயர் பெற்றது இது. இதில் இரும்புச்சத்து, தங்கச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்தது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர, உடலில் உயிர் அணுக்களை உண்டாக்கி குழந்தைப் பேற்றை அடையச்செய்யும். தாதுவைப் பெருக்கி உடலுக்கு சக்தியையும், அழகையும் தரும். வயிற்றுப்போக்கு, சிறுநீரக நோய், இரத்த சோகை, மலச்சிக்கல், வாயு தொல்லை, வயிற்றுப்புண் போன்றவையும் சரிசெய்யும். அதோடு, கொக்கிப் புழு, நாக்கு பூச்சி போன்ற ஒட்டுண்ணிகளையும் வயிற்றிலிருந்து இது வெளியேற்றி விடுகிறது.

ஆரைக் கீரை: பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூளைக் கோளாறு மற்றும் பால்வினை நோய்கள் போன்றவற்றிற்கு கைகண்ட மருந்து இந்தக் கீரை. நீர் நிலைகள் மற்றும் வாய்க்கால் ஓரங்களில் தானே வளரும் கொடி வகை கீரை இது. இதன் இலை நான்கு இதழ் கொண்டது. இந்தக் கீரைபை துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட, தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

சுங்கான் கீரை: ஆஸ்துமா, மூச்சுத் திணறல் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் குணம் சுங்கான் கீரைக்கு உண்டு. இதில் ஆக்ஸலேட்கள் அதிகளவில் இருப்பதால் பூச்சிக்கடிகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. கிராமப்புற மக்கள் தேள் கடிக்கும், பாம்புக்கடிக்கும் சுங்கான் கீரையின் சாறு கொடுப்பார்கள். இக்கீரையை புளி சேர்க்காமல் பாசிப்பருப்பு சேர்ந்து சமைத்து சாப்பிட, குடல் புண் குணமாகும்.

சதக்குப்பைக் கீரை: இந்தக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் வாய் நாற்றம் அகலும். கர்ப்பப்பை கோளாறு உள்ளவர்கள் சதக்குப்பைக் கீரையை சீரகம், மிளகு மற்றும் பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட, சரியாகும். அதோடு, வாதநோய்களும் குணமாகும்.சிறு கீரை: இந்தக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, உடல் வலுவடையும். உடலில் மிகுதியாக இருக்கும் பித்தம் மற்றும் வாத தோஷங்கள் குறையும். சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பலப்படுத்தும். சிறுநீர்ப்பை நோய்களை சரிசெய்யும். மது குடிப்பதால் உண்டாகும் குடல் புண்களை ஆற்றும். உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றும். காச நோய்க்காரர்கள் இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் விரைவில் குணம் காணலாம்.

தவசிக் கீரை: அனைத்து வைட்டமின்களையும் கொண்டது இந்தக் கீரை. எனவே, இதனை, ‘மல்டி வைட்டமின் பிளான்ட்’ என்கிறார்கள். தூங்கி எழுந்ததும் உண்டாகும் உடற்சோர்வு , எப்போதும் தூங்க வேண்டும் என்ற உணர்வு மற்றும் சர்க்கரை நோயால் ஏற்படும் உடல் பலகீனம் போன்ற குறைபாடுகளை தீர்க்க, வாரம் ஒரு முறை தவசிக்கீரை சாப்பிட சரியாகும்.

சண்டி கீரை: மூட்டு வலி, முதுகு வலி மற்றும் இடுப்பு வலிகளை போக்குவதுடன், சளி, சுவாசக் கோளாறு மற்றும் நெஞ்சு வலி போன்றவற்றை போக்கும் ஆற்றல் கொண்ட அற்புத மூலிகை கீரை இது. இதனை லச்சுக்கொட்டை கீரை என்றும் கூறுவர். உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் மிக்கது என்பதால் இந்தக் கீரைபை நச்சு கெட்ட கீரை என்று கூறி வைத்தனர் பெரியோர். அதுவே மருவி லச்சுக்கொட்டை கீரையானது. வாதநோய் போக்கும் மருந்தாக கருதப்படும் இக்கீரைபை பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்து கூட்டாக வாரம் ஒருமுறை மட்டுமே சாப்பிட வேண்டும்.

வெந்தயக்கீரை: தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்களும் நிறைந்த இக்கீரை ஜீரண சக்தியை அதிகரிக்கும், சொறி சிரங்கு நீக்கும், நீரிழிவு நோய் மற்றும் காசநோயை குணமாக்கும், பார்வை குறைபாடுகளை சரி செய்ய உதவும். முகத் தோற்றம் மிகவும் இளமையாக இருக்க, இரவு படுக்கைக்குச்செல்லும் முன் வெந்தயக் கீரையை நன்கு அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி வர வேண்டும். இப்படிச் செய்து வர சில வாரங்களில் முகத்தில் உள்ள பரு மற்றும் கரும்புள்ளிகள், முக வறட்சி மறையும். பருக்கள் இருந்த தழும்புகள் கூட மறையும்.

முளைக் கீரை: இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்ட இந்தக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியை தருகிறது. நரம்பு தளர்ச்சிக்கு இது ஒரு அற்புதமான மருந்து. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 150 கிராம் சாப்பிட நரம்புகள் பலப்படும் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here