Last Updated on: 10th February 2024, 10:27 pm
காலையில் காபி, டீயை தவிர்த்து சத்தான ஆரோக்கியமான பானங்களைப் பருக உடல் சுறுசுறுப்பு அடைவதுடன் அன்றைய பொழுது உற்சாகமாக கழியும். இதற்கு மிகவும் மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை. எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்தே இவற்றை தயாரித்து விடலாம்
.1. கரிசலாங்கண்ணி டீ: கரிசலாங்கண்ணி பொடியாகவே கிடைக்கிறது. இதனை வாங்கி காலையில் ஒரு கப் நீரில் ஒன்றரை ஸ்பூன் பொடியை சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி சிறிது தேன் கலந்து பருக நெஞ்சில் சளி கட்டாமல் இருப்பதுடன், உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும்.
2. ஆவாரை டீ: ஆவாரம் பூக்களை பறித்து நிழலில் காய வைத்து எடுத்து பத்திரப்படுத்தவும். அடுப்பில் ஒரு கப் நீரை வைத்து ஒரு ஸ்பூன் அளவில் காய்ந்த ஆவாரம் பூக்களை போட்டு நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி பனங்கற்கண்டு சிறிது சேர்த்து அந்த டீயை இளம் சூட்டில் பருக, சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி கல்லீரல் பலப்படும். ஆவாரம் பூ பொடியும் கிடைக்கிறது. வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியை கலந்து தேனுடன் சேர்த்து பருக நல்ல மலமிளக்கியாகவும் செயல்படும்.
3. முசுமுசுக்கை டீ: முசுமுசுக்கை கீரையை பறித்து நிழலில் உலர்த்தி நன்கு காய வைத்து பத்திரப்படுத்தவும். இதனைக் கொண்டு மூலிகை டீ தயாரித்துப் பருக, நெஞ்சு சளி, ஈளை, இளைப்பு போன்றவை குணமாகும். நாட்டு மருந்து கடைகளில் முசுமுசுக்கை பொடி பாக்கெட்டில் கிடைக்கிறது. இதனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம் அல்லது தேன் கலந்து சாப்பிட சளி, இருமல், தும்மல் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படும். நுரையீரலுக்கு சிறந்த நண்பன் இது.
4. நெல்லிக்கனி டீ: தினம் இரண்டு பெரிய நெல்லிக்கனியை நன்கு நசுக்கி ஒரு கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும். இதனை வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு, தேன் கலந்து இளம் சூடாக குடித்து வர, சிறந்த ஆரோக்கியமான பானம் இது. நெல்லி பொடியாகவே கடைகளில் கிடைக்கிறது. இதனையும் வாங்கி பயன்படுத்தலாம். ஒரு கப் நீரில் ஒரு ஸ்பூன் அளவில் போட்டு நன்கு கொதிக்க விட்டு இஞ்சித் துருவல் சிறிது, மிளகுப்பொடி அரை ஸ்பூன் சேர்த்து கொதித்ததும் வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு சிறிது கலந்து பருக சிறந்த ஆரோக்கியமான பானம் தயார்.
5. இஞ்சி டீ: ஒரு துண்டு இஞ்சி தோல் நீக்கி நன்கு நசுக்கி ஒரு கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும். பிறகு அதனை வடிகட்டி சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, சுவைக்காக சிறிது தேன் கலந்து இளம் சூட்டுடன் பருக வாய்வு, வயிற்று உப்புசம், எதுக்களிப்பு போன்றவற்றிற்கு மிகவும் நல்லது.
6. வாழைத்தண்டு சாறு: வாழைத்தண்டு சிறிது, இஞ்சி ஒரு துண்டு, சின்ன வெங்காயம் 2, சீரகம் அரை ஸ்பூன் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அந்தச் சாறுடன் உப்பு, எலுமிச்சைம் பழச்சாறு சிறிது பிழிந்து காலையில் குடித்து வர நீர் சுருக்கு, சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், சிறுநீரகக் கற்கள் கரையவும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.