Last Updated on: 28th May 2023, 06:11 pm
ஈலோன் மஸ்க்கின் நியூராலிங்க் என்ற மூளை சிப் நிறுவனம், மனிதர்களிடம் தனது முதல் சோதனைகளை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) அனுமதி பெற்றுள்ளதாகக் கூறுகிறது.அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம், மூளையில் சிப்களைப் பொருத்தி, அவற்றை கணினிகளுடன் இணைப்பதன் மூலம் மனிதர்களின் பார்வை மற்றும் இயக்கத்தை மீட்டெடுக்க உதவ விரும்புகிறது.
இந்த சோதனைகளுக்காக உடனடியாக ஆட்களை சேர்க்கும் நடவடிக்கைகளை இன்னும் தொடங்கவில்லை என நியூராலிங்க் தெரிவித்துள்ளது. சோதனைகளைத் தொடங்குவது குறித்து மஸ்க்கின் முந்தைய பணிகள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகமே இது குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
எஃப்.டி.ஏ ஒப்புதலை பெறுவதற்கு நியூராலிங்கின் முந்தைய முயற்சி பாதுகாப்பு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது என பல தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தது.
பக்கவாதம் மற்றும் பார்வையின்மை போன்ற நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க நியூராலிங்க் அதன் மைக்ரோசிப்களைப் பயன்படுத்த முடியும் என நம்புகிறது.
மேலும் சில மாற்றுத்திறனாளிகள், அவர்களுடைய சிரமங்களிலிருந்து விடுபட கணினி மற்றும் மொபைல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உதவவும் நியூராலிங்க் விரும்புகிறது.குரங்குகளின் மூலம் ஏற்கெனவே சோதனைகளை மேற்கொண்ட இந்நிறுவனம், மூளையில் உள்ள தகவல்களை ப்ளூடூத் மூலம் இயந்திரங்களுக்கு மாற்றும் வகையில் இந்த சிப்களை உருவாக்கியுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் கணினிகளால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், அந்த ஆபத்துக்களை தடுக்கவும் இந்த சிப்களால் முடியும் என ஈலோன் மஸ்க் முன்பு ஒருமுறை தெரிவித்திருந்தார்.Twitter இல் வியாழக்கிழமையன்று இச்செய்தியை அறிவித்த நியூராலிங்க், “ஒரு நாள் எங்கள் தொழில்நுட்பம் ஏராளமானோருக்கு உதவி செய்யப் போவதன் முக்கிய முதல் படி தான் இது,” என்று தெரிவித்துள்ளது.
“நியூராலிங்க் குழுவினர் மேற்கொண்ட மிகவும் இன்றியமையாத பணிகளின் காரணமாக FDA இந்த அனுமதியை அளித்திருக்கிறது,” என்றும் இத்தகவலில் அது தெரிவித்துள்ளது.மூளையில் உள்ள தகவல்களை ப்ளூடூத் மூலம் மின்பொருட்களுக்கு அனுப்புவது குறித்து மேற்கொள்ளப்படும் சோதனைக்கு பங்கேற்பாளர்களை பதிவு செய்யும் பணிகள் குறித்த கூடுதல் தகவல்கள் “விரைவில்” அளிக்கப்படும் என்றும் நியூராலிங்க் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
நியூராலிங்கின் இணையதளத்தில் அந்நிறுவனத்தின் சோதனை நடவடிக்கைகள் அனைத்தும், “பாதுகாப்பு, அனைவரும் எளிமையாக அணுகும் விதம் மற்றும் நம்பகத்தன்மைைய” உறுதி செய்ய உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்துள்ளது.
நியூராலிங்கின் மூளைக்குள் வைக்கப்படும் சிப்புகள் பரவலாகக் கிடைப்பதற்கு முன், தொழில்நுட்ப ரீதியிலும், நெறிமுறைகள் சார்ந்தும் அந்த சிப்புகளை ஏராளமான ஆய்வுகளுக்கு உட்படுத்தி, அவற்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டில் ஈலான் மஸ்க் மற்றொரு பங்குதாரருடன் இணைந்து நிறுவிய நியூராலிங்க், நடைமுறையில் சாத்தியமில்லாத வேகத்தில் பயணிக்க முயல்கிறது.தொடக்கத்தில் 2020 ஆம் ஆண்டில் மனித மூளையில் சிப்புகளை பதிக்க முடிவெடுக்கப்பட்ட நிலையில், பின்னர் 2022 இல் இப்பணிகளை தொடங்குவதாக உறுதியளித்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்நிறுவனம் மற்றொரு பின்னடைவை எதிர்கொண்டது. அதாவது, விலங்குகளைப் பயன்படுத்தி சோதனைகளை மேற்கொண்ட நியூராலிங்க், விலங்குகள் நலன்களை மீறிச் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்த விசாரணைக்கு இந்நிறுவனம் உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில், எப்போதும் போல அந்த குற்றச்சாட்டுக்களுக்கு நியூராலிங்க் மறுப்பு தெரிவித்துள்ளது.மனிதர்களைப் பயன்படுத்தி சோதனைகளை மேற்கொள்ள FDA ஒப்புதல் அளித்துள்ளதற்கு முன்பு, அண்மைக் காலத்தில் சுவிச்சர்லாந்து நாட்டிலும் ஆராய்ச்சியாளர்கள் இதே போன்ற முயற்சியை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது கால்களை இயக்க முடியாமல் தவித்த நிலையில், இது போன்ற சிப்புகளை மூளையில் பொருத்தி, அதன் மூலம் அவர் நடந்து செல்லுமளவுக்கு சுவிச்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.