புனித ரமலான் மாதத்தில் தராவீஹ் அல்லது பிற தொழுகைகளின் போது சாலைகளில் வாகனங்களைத் தாறுமாறாக நிறுத்துவதை தவிர்க்குமாறும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும் அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், வாகன நிறுத்துமிட சட்டத்தை கடைபிடிக்குமாறும் குடியிருப்பாளர்களை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் வாகனங்களை நிறுத்துவதற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும், ஃபெடரல் போக்குவரத்துச் சட்டத்தின்படி, போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்கத் தவறினால் 500 திர்ஹம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் வாகன ஓட்டிகளை ஆணையம் எச்சரித்துள்ளது.
புனித ரமலான் மாதத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதையும், பாதுகாப்பை மேம்படுத்தும் நேர்மறையான நடைமுறைகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட தினசரி ரமலான் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘Our month of obedience and commitment’ சீசன் மூன்றை அபுதாபி மீடியாவுடன் இணைந்து அபுதாபி காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், தாராவீஹ் மற்றும் பிற தொழுகைகளின் போது மசூதிகளுக்கு அருகில் வாகனங்களை ஒழுங்கற்ற முறையில் நிறுத்துவது ஒரு நாகரீகமற்ற நடத்தை என்று அபுதாபி காவல்துறை அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளது. மேலும், மசூதிகளின் நுழைவாயில் மற்றும் வெளியில் போக்குவரத்துக்கு இடையூறாக, பொறுப்பற்ற முறையில் வாகனங்களை நிறுத்துவதன் மூலம் விதிமீறல்களைச் செய்வதைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளை அறிவுறுத்தியுள்ளது.