Last Updated on: 2nd April 2024, 10:44 pm
புதுடெல்லி: இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவை தெரிவிக்க அமெரிக்காவின் 20 நகரங்களில் வெளிநாடு வாழ் பாஜக ஆதரவாளர்கள் கார் பேரணி நடத்தினர்.மேரிலாண்டின் வாஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க வாழ் சீக்கியர்கள் ஞாயிற்றுக்கிழமை கார் பேரணி நடத்தினர்.
இவர்கள், பிறகு பாஜக கொடிகள் மற்றும் அமெரிக்க தேசியக் கொடியால் அலங்கரிக்கப்பட்ட கார்களில் ஊர்வலம் சென்றனர். பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அட்லாண்டாவில் நடைபெற்ற பேரணியில் சுமார் 150 கார்கள் இடம்பெற்றன. அனைத்தும் பாஜக கொடி, இந்திய தேசியக்கொடிகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தன.
இதுபோன்ற கார் பேரணி ஆஸ்டின், டல்லாஸ், சிகாகோ, ராலே, டெட்ராய்ட் உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெற்றது. அண்மையில் ஆஸ்திரேலியாவில் ‘பிரதமர் மோடியின் குடும்பம்’ என்ற பெயரில் பாஜகவின் வெளிநாடு வாழ் நண்பர்கள் அமைப்பு சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
சிட்னி, மெல்போர்ன், பெர்த், பிரிஸ்பேன், கான்பெரா உள்ளிட்ட 7 நகரங்களில் முக்கிய இடங்களில் இந்தப் பிரச்சாரம் நடைபெற்றது.இதற்கு முன் லண்டனில் வெளிநாடு வாழ் பாஜக நண்பர்கள் சார்பில் கார் பேரணி நடைபெற்றது. இதில் சுமார் 250 கார்களில் பாஜக ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.