Last Updated on: 31st May 2023, 08:01 am
கொல்கத்தா: இந்தியாவில் 58 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாவிற்கு வந்த போது உயிரிழந்த அமெரிக்க ராணுவ அதிகாரியின் உடல் இந்தியாவிலேயே அடக்கம் செய்யப்பட்டது. தற்போது அந்த உடலின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் சொந்த நாட்டிற்கே கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? என்பது குறித்த விவரங்கள் வருமாறு:
அமெரிக்க ராணுவத்தில் ஹாரி கிளீன் பெக் பிக்கெட் என்பவர் மேஜர் ஜெனரல் பதவி வகித்தார். 1913 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் சேர்ந்த கிளீன் பெக் பிக்கெட், அமெரிக்காவில் மிகவும் பிரபலமான ராணுவ அதிகாரியாக இருந்தார். 1914 ஆம் ஆண்டு முதல் 1918- ம் ஆண்டு வரை நடைபெற்ற முதல் உலகப் போர் மற்றும் 1939-1945 வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரிலும் இவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 1965- ஆம் ஆண்டு இந்தியாவிற்கு ஹாரி கிளின் பெக் சுற்றுலா வந்தார். அப்போது புகழ்பெற்ற சுற்றுலா தளமான மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் சென்ற போது மாரடைப்பால் காலமானர். இதையடுத்து, பிக்கெட்டின் உடல் டார்ஜிலிங்கில் உள்ள சிங்கடம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டதாம். ஆனால், பிக்கெட்டின் உடலை அமெரிக்காவில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே அவரது குடும்பத்தினரின் விருப்பமாக இருந்துள்ளது.
இதையடுத்து அமெரிக்க அரசு இந்திய அரசுடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. டார்ஜிலிங் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒரு தனியார் சேவை நிறுவனத்தின் உதவியுடன் அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரி பிக்கெட்டின் கல்லறை ஒரு வழியாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து, அவரது உடலின் எச்சங்கள் தோண்டியெடுத்து அமெரிக்க கொண்டு செல்லப்பட்டது. அதாவது 58 ஆண்டுகளுக்கு பிறகு உடல் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க துணை தூதர் மெலிண்டா பாவக், “முன்னாள் மேஜர் ஜெனரல் பிக்கெட்டின் உடலை அவரது குடும்பத்தினர் விருப்பப்படி மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல இருப்பது பெருமை அளிக்கும் விஷயம் ஆகும். இதற்காக உதவிகரமாக இருந்த இந்திய அரசாங்கத்திற்கும் டார்ஜிலிங் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.
அதேபோல், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் எரிக் கார்செட்டி கூறுகையில், மேற்கு வங்காளம் மற்றும் டார்ஜிலிங் மாவட்ட நிர்வாகம் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதன் அடிப்படையில் தான் இது சாத்தியம் ஆனது. முன்னாள் ராணுவ அதிகாரி பிக்கெட்டின் உடலை அவரது நேசத்திற்குரிய குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உதவியாக இருந்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா அமெரிக்கா நட்புறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக இது அமைந்து இருக்கிறது” என்றார்.