Last Updated on: 4th July 2023, 01:18 pm
ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் இப்போது உச்சம் தொட்டுள்ள நிலையில், அதன் மதிப்பு உலகின் பல டாப் நாடுகளைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது.
உலகின் டாப் டெக் நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் இருக்கிறது. கடந்த காலங்களில் டெக் துறைகளில் ஆப்பிள் மிகப் பெரிய புரட்சிகளைச் செய்துள்ளது. அவர்களின் மேக் புக் கம்ப்யூட்டர், ஐபோன், ஐபாட் எனப் பலவற்றைச் சொல்லலாம்.
குறிப்பாக பைரசியில் பாடல்கள் திருட்டுத்தனமாகப் பரவிக் கொண்டிருந்த நிலையில், அந்த நிலையை மாற்றியது என்னவோ ஐபாட்கள் தான். அந்த காலகட்டத்தில் ஐபாட்களின் வருகை மிகப் பெரியதாகப் பேசப்பட்டது.
ஆப்பிள்: மொபைல்களை பொறுத்தவரை அதை ஐபோன்களுக்கு முன்பு, ஐபோன்களுக்கு பின்பு என்றே கூட பிரிக்கலாம். ஐபோன்கள் வருவதற்கு முன்பு, மொபைல்கள் அனைத்தும் பெரியதாகவும் பட்டன்கள் நிறைந்தும் இருந்தது. அதை மாற்றி அழகாகக் குட்டியாக மொபைலை கொண்டு வந்தது ஆப்பிள். பார்க்க மட்டுமின்றி, பயன்படுத்தவும் கூட ஐபோன்கள் ரொம்பவே எளிமையானதாகவே இருக்கும்.
இதுவே டெக் உலகைப் புரட்டிப் போட்டது.இன்று உலகின் டாப் நிறுவனங்களில் ஒன்றாக ஐபோன் இருக்கிறது. இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் ஐபோன்கள் வெளியாகும் போது, உலகமே உற்று நோக்கும் ஒரு நிகழ்வாகவே அது இருக்கிறது. இதற்கிடையே ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த ஆண்டு ஜனவரிக்கு மாதம் $3 டிரில்லியன் டாலரை தாண்டியிருந்தது. இதற்கிடையே இப்போது சுமார் 1.5 ஆண்டுகளுக்குப் பிறகு அது மீண்டும் $3 டிரில்லியன் டாலரை தாண்டியிருக்கிறது.
என்ன காரணம்: மொபைல் போன்கள் மார்கெட்டில் சில ஆண்டுகளாகவே பெரிய புதுமை அல்லது மாற்றங்கள் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் சிறு சிறு மாற்றங்கள் உடன் தான் மொபைல்கள் வருகிறது. இதை ஆப்பிளும் உணர்ந்தே இருப்பதால்தான் அவர்கள் விர்சுவல் ரியாலிட்டி போன்றவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.விர்சுவல் ரியாலிட்டி துறையில் ஆப்பிள் நிறுவனத்தால் வருவாயை அதிகரிக்க முடியும் என முதலீட்டாளர்கள் நம்புவதாலேயே அதிகளவில் முதலீடு செய்கிறார்கள். இதன் காரணமாகவே அதன் பங்கு மதிப்பு இப்போது உச்சத்தில் இருக்கிறது. உலகில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இப்போது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் தான் இருக்கிறது.
புதிய உச்சம்: ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு இப்போது 193.97 டாலராக இருக்கிறது. கடந்தாண்டு ஜன. 3ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 டிரில்லியன் டாலரை எட்டியது. இருப்பினும், இப்போது கொஞ்ச நேரத்திலேயே அதன் மதிப்பு சரிந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது சுமார் 1.5 ஆண்டுகளுக்குப் பிறகுத் அதன் மதிப்பு மீண்டும் $3 டிரில்லியன் டாலரை தொட்டுள்ளது.அமெரிக்க மத்திய வங்கி வரும் மீட்டிங்கில் வட்டி விகிதத்தைக் குறைக்கத் தொடங்கும் என்று முதலீட்டாளர்கள் நம்புவதும் செயற்கை நுண்ணறிவில் ஆப்பிள் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கப் போவதாக வெளியான தகவல்களும் தான் ஆப்பிள் பங்கு உச்சம் தொட காரணமாக அமைந்துள்ளது.
அதேபோல இந்தாண்டின் இரண்டாவது காலாண்டில் ஐபோன்களின் விற்பனை எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக இருக்கிறது. மேலும், கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட விஷன் ப்ரோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவை எல்லாம் சேர்த்துத் தான் ஆப்பிள் விலை உச்சம் தொடக் காரணமாக இருக்கிறது. இப்போது ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு 3 டிரில்லியனை தொட்டுள்ளது.
உலக நாடுகள்: அதாவது பெரும்பாலான உலக நாடுகளின் ஜிடிபியை காட்டிலும் ஆப்பிள் மதிப்பு அதிகமாக இருக்கிறது. நாடுகளின் ஜிடிபி வரிசையில் பார்த்தால் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, இந்தியாவுக்கு பிறகு ஆப்பிள் வரும். இந்தியாவின் ஜிடிபி 3.50-3.80 டிரில்லியனாக உள்ள நிலையில், ஆப்பிள் என்ற ஒற்றை நிறுவனத்தின் மதிப்பு மட்டும் 3 டிரில்லியன் டாலரை தொட்டுள்ளது.
ஒட்டுமொத்த பிரிட்டன் நாட்டின் ஜிடிபிக்கு இணையாக ஆப்பிள் நிறுவனம் மதிப்பு மிக்கதாக உள்ளது.பிரான்ஸ், ரஷ்யா, கனடா, இத்தாலி, சவுதி நாடுகளை காட்டிலும் மதிப்பு மிக்கதாக ஆப்பிள் இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்து கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், மைக்ரோசாப்ட், அமேசான், என்விடியா கார்ப் நிறுவனங்கள் $1 டிரில்லியனை தொட்டுள்ளது. இந்தாண்டு மட்டும் ஆப்பிள் பங்குகள் சுமார் 46% உயர்ந்துள்ளன. அதேநேரம் இந்தாண்டு டெஸ்லா மற்றும் மெட்டா (பேஸ்புக்) பங்குகள் இரட்டிப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.