வாஷிங்டன்: அமெரிக்காவில் சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றிய இந்தியர், தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜலான் ராஜேந்திர நகரை சேர்தவர் தேஜ் பிரதாப் சிங் (வயது 43) அமெரிக்காவில் கடந்த 2009- ஆம் ஆண்டு முதல் செட்டில் ஆன இவர் தனது மனைவி மற்றும் ஒரு மகன், மகள் என குடும்பத்தினருடன் அங்குள்ள நியூஜெர்சி அருகே உள்ள பின்ஸ்போரா பகுதியில் வசித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வந்த தேஜ் பிரதாப் சிங்கிவின் வீடு கடந்த இரு தினங்களாக திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அமெரிக்க போலீசார் வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது, வீட்டின் படுக்கறையில் தேஜ்பிரதாப் சிங் அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இறந்து கிடந்தனர். உடனடியாக உடலை கைப்பற்றிய போலீசார் பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இது குறித்து பிளெயின்ஸ்போரா காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட விசாரணையின் படி பொது மக்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
பொதுமக்களின் யாருக்கேனும் இந்த மரணம் தொடர்பாக தகவல் தெரிவித்தால் உடனே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கைவைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளன்ர். அமெரிக்காவில் சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வந்த இந்தியர், குடும்பத்துடன் இறந்து கிடந்த சம்பவம் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேஜ் பிரதாப் சிங் மற்றும் அவரது மனைவி, பிள்ளைகளின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.