Last Updated on: 31st May 2023, 11:48 am
நியூயார்க்: சர்வதேச அளவில் முக்கியமான நகரங்களில் ஒன்றான அமெரிக்காவின் நியூயார்க் மண்ணுக்குள் சரிந்து வருவதாக பகீர் தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
என்னதான் அமெரிக்கத் தலைநகராக வாஷிங்டன் இருந்தாலும் கூட அமெரிக்காவின் பொருளாதார தலைநகராக அறியப்படுவது நியூயார்க் நகரம் தான். பல முக்கிய நிறுவனங்களும் நியூயார்க்கில் தான் அலுவலர்களை வைத்திருக்கும்.
உலகின் டாப் முதலீட்டாளர்கள் இருக்கும் வால் ஸ்டீரீட் கூட இந்த நியூயார்க் நகரில் தான் இருக்கிறது. அந்தளவுக்கு அமெரிக்கப் பொருளாதாரத்தில் நியூயார்க் முக்கியமான ஒரு இடத்தை இடத்தை பெற்றிருக்கிறது. ஆனால், இந்த நியூயார்க் நகரம் தான் இப்போது பூமிக்குள் சரிந்து வருகிறதாம். அதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.
கட்டிடங்கள்: அமெரிக்கா என்றவுடன் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது அங்குள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் தான். குறிப்பாக நியூயார்க் நகரில் ஏகப்பட்ட வானுயர்ந்த கட்டிடங்களை நம்மால் பார்க்க முடியும். ஆனால், அதே கட்டிடம் தான் இப்போது நியூயார்க் நகருக்கு வில்லனாக மாறியுள்ளது. இந்த உயரமான கட்டிடங்களின் எடையால் நியூயார்க் நகரம் வரை புதைந்து வருகிறது. இதை ஆய்வாளர்கள் சப்சிடென்ஸ் என்று குறிப்பிடுகிறார்கள்.
பொதுவாக ஒரு இடம் புதையும் இந்த சப்சிடென்ஸ் இயற்கையாக நடக்கும். ஆனால், நியூயார்க் நகரைப் பொறுத்தவரை அங்குள்ள அதிக எடையுடன் உள்ள உயரமான கட்டிடங்களால் ஆண்டுக்குச் சராசரியாக 1 முதல் 2 மில்லிமீட்டர்கள் வரை மண்ணுக்குள் புதைந்து வருகிறது.
என்ன காரணம்: நியூயார்க் நகரில் மட்டும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் உள்ளன. கான்கிரீட், கண்ணாடி, உலோகத்தால் கட்டப்பட்ட இந்த கட்டிடங்களின் ஒட்டுமொத்த எடை 1.7 டிரில்லியன் டன்னாக இருக்கிறது. இதுதான் நியூயார்க் நகர் புதையக் காரணமாக இருக்கிறது. ஏனென்றால் நியூயார்க் நகரில் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான நிலப்பரப்பு இல்லை.
அங்குள்ள புரூக்ளின், குயின்ஸ் எனப் பல இடங்களில் தளர்வான மண் தான் அங்கே இருக்கிறது.. இந்த இடங்களில் அதிக எடையுடன் கூடிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இது குறித்து அமெரிக்கப் புவியியல் ஆய்வின் முதன்மை ஆய்வாளர் டாம் பார்சன்ஸ் கூறுகையில், “இந்த மெல்ல நடக்கும் செயல்முறை தான். அதேநேரம் இது தொடர்ந்தால் நகரின் சில பகுதிகள் இறுதியில் நீருக்கடியில் சென்றுவிடும்.
எச்சரிக்கை: இது தவிர்க்க முடியாதது. நிலம் கீழே செல்கிறது. நீர் மேலே வருகிறது. ஒரு கட்டத்தில், நிலம் நிச்சயம் நீருக்குள்ளே சென்றுவிடும். இது மெதுவாக நடக்கும் செயல்முறை என்பதால் நாம் இப்போதே இது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. கட்டிடங்கள் ஒரு நிலப்பரப்பை எந்தளவுக்குப் பாதிக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
நியூயார்க் தனியாக ஒரு தீவாக அமைந்துள்ளது. தீவின் தெற்குப் பகுதியில் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 1 அல்லது 2 மீட்டர் (3.2 அல்லது 6.5 அடி) தான். அதாவது இது நீருக்கு மிக அருகில் உள்ளது. இதுதான் அதிக கவலை தரும் இடம். நிலம் மூழ்குவதைப் போலவே கடல் மட்டமும் உயர்வதால் நியூயார்க் நகரின் சில பகுதிகள் எதிர்பார்த்ததை விட விரைவில் தண்ணீருக்கு அடியில் இருக்கும் அபாயம் உள்ளது.இதற்குக் கட்டிடங்கள் மட்டுமே காரணம்.
புதிய கட்டுமானங்களை நிறுத்த வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கிறது. அதில் கட்டிடங்களும் முக்கிய காரணம் என்றே நாங்கள் சொல்ல வருகிறோம். இந்தப் பிரச்சினை பெரிதாகும் முன்னரே நாம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா மட்டுமில்லை: அதேநேரம் நியூயார்க் நகரம் மட்டும் இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்கிறது என்ற சொல்ல முடியாது.. உலகெங்கும் பல நகரங்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்கிறது. குறிப்பாக இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா ஜாவா கடலில் மூழ்கி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த முடியாமல் தான் இந்தோனேசிய அரசு புதிதாகத் தலைநகரையே அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.