14.6 C
Munich
Saturday, October 12, 2024

துபாயில் ஒரு அதிசயம்… நீரில் மிதக்கும் மூன்றடுக்கு மசூதி… உலகில் வேறெங்கும் பார்க்க முடியாது!

துபாயில் ஒரு அதிசயம்… நீரில் மிதக்கும் மூன்றடுக்கு மசூதி… உலகில் வேறெங்கும் பார்க்க முடியாது!

Last Updated on: 23rd September 2023, 10:33 pm

வளைகுடா நாடுகள் என்றாலே செல்வம் கொழிக்கும் என்ற பேச்சை தவிர்க்க முடியாது. பிரம்மாண்ட கட்டிடக் கலைகள் முதல் உலகிற்கே வாரி வழங்கும் எண்ணெய் வளம் வரை பல்வேறு ஆச்சரியங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறது. இந்த வரிசையில் நீரில் மிதக்கும் ஒரு மசூதியை கட்டமைத்து வருகிறது துபாய் அரசு. உலகிலேயே நீருக்கடியில் ஒரு மசூதி அமைக்கப்படுவது இதுவே முதல்முறை. 55 மில்லியன் திராம்கள் மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த மசூதி உலகின் அதிசயங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர்.

இதற்கான முன்னெடுப்பை எமிரேட்ஸ் இஸ்லாமிய விவரங்கள் துறை மற்றும் சாரிட்டபிள் செயல்பாட்டு துறை (IACAD) மேற்கொண்டு வருகிறது. மத வழிபாட்டு சார்ந்த சுற்றுலா திட்டத்தின் ஒருபகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. துபாய் கடற்கரையில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் தான் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேக நடை மேம்பாலம் ஒன்று அமைக்கப்படுகிறது

அதில் நடந்து சென்றால் மிதந்து கொண்டிருக்கும் மசூதியை சென்றடையலாம். நீருக்கடியில் அமைக்கப்பட்டு வரும் மசூதியானது வழிபாட்டு தலமாக மட்டுமின்றி, எமிரேட்ஸின் சுற்றுலாவிலும் முக்கிய பங்கு வகிக்கும். முஸ்லீம்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மசூதியானது மூன்று அடுக்குகளை கொண்டதாக இருக்கும்.

இதிலுள்ள தொழுகை நடத்தும் இடம் என்பது நீருக்குள் மிதந்த படியே இருப்பதால் வித்தியாசமான அனுபவமாக அமையும் எனக் கூறுகின்றனர். ஒரே சமயத்தில் 50 முதல் 75 பேர் வரை தொழுகை நடத்த முடியும். மொத்த கட்டுமானத்தில் ஒரு பாதி நீருக்கு அடியில் இருக்கும். மேற்பகுதியில் அமரும் இடம், காபி ஷாப் இடம்பெற்றிருக்கும். தொழுகை நடத்தும் இடம், கை கழுவும் இடம் உள்ளிட்டவை நீருக்கு அடியில் இருக்கும்.

சமீபத்தில் துபாயின் நீருக்கடியில் அமைக்கப்பட்டு வரும் மசூதி தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த மசூதி பயன்பாட்டிற்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து மத நம்பிக்கை கொண்ட மக்களும் வரவேற்கப்படுவதாக துபாய் அரசு குறிப்பிட்டுள்ளது. எமிரேட்ஸ் இஸ்லாமிய விவரங்கள் துறை மற்றும் சாரிட்டபிள் செயல்பாட்டு துறை அடுத்தகட்டமாக சிறப்பு வாய்ந்த திட்டத்தை கையில் வைத்துள்ளது.

​அடுத்ததாக 3டி பிரிண்டிங் மசூதி

அதாவது, உலகிலேயே முதல்முறை முழுவதும் பயன்படுத்தக் கூடிய வகையிலான 3டி பிரிண்டிங் மசூதியை உருவாக்க இருக்கின்றனர். புர் துபாயில் 2 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 600 பேர் தொழுகை நடத்த முடியும். இதற்கான வேலைகள் வரும் அக்டோபர் மாதம் தொடங்கி வரும் 2025ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

முதல் 4 மாதங்கள் கட்டடத்தின் 3டி பிரிண்டிங் வேலைகள் நடைபெறும். அடுத்த 12 மாதங்கள் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இறுதியாக மெருகேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here