Last Updated on: 25th June 2023, 09:56 am
வாஷிங்டன்: அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், அடுத்த 7 ஆண்டுகளில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் ரூ.1.23 லட்சம் கோடியை முதலீடு செய்யும் என்று ஆண்டி ஜாஸ்ஸி அறிவித்தார். மேலும், 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 கோடி சிறுவணிகங்களை டிஜிட்டல்மயமாக்கவும், 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே அமேசான் நிறுவனம் இந்தியாவில் ரூ.90,200 கோடி முதலீடு செய்துள்ளது.
இதுபோல இந்தியாவில் ரூ.82,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாகவும், கூகுள் நிறுவனத்தின் பின்டெக் செயல்பாடுகளுக்கான மையத்தை குஜராத்தில் திறக்க உள்ளதாகவும் சுந்தர் பிச்சை அறிவித்தார். இதுகுறித்து சுந்தர் பிச்சை கூறுகையில், “பிரதமர் மோடியை சந்தித்ததை பெருமையாக கருதுகிறேன். கூகுள் நிறுவனம் இந்தியாவில் மேற்கொண்டுவரும் 10 பில்லியன் டாலர் முதலீடு குறித்து மோடியிடம் தெரிவித்தேன். இந்தியாவை டிஜிட்டல்மயமாக்குவது தொடர்பாக அவர் கொண்டிருக்கும் லட்சியம் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது” என்றார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாதெல்லா, பிரதமர் மோடி இடையிலான சந்திப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்து பேசினார். இவை தவிர, செமி கண்டக்டர் தயாரிப்பு நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜிஸ் இந்தியாவில் ரூ.6,750 கோடியை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு மேற்கொள்ளும் என்று அதன் சிஇஓ எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்பிள், ஓப்பன் ஏஐ, பிளக்ஸ், எஃப்எம்சி கார்ப்பரேசன் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளையும் பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தில் சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.