Last Updated on: 24th September 2023, 09:58 pm
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இப்போது அமெரிக்காவில் வசிக்கும் மக்களில் 7 பேரில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற ஷாக் தகவல் தெரிய வந்துள்ளது.
உலகின் வல்லரசு நாடாக அமெரிக்கா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல வெளிநாடுகளில் இருந்தும் அமெரிக்காவுக்குச் சென்று வருகின்றர். இந்தியாவிலேயே ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் பலரும் எப்படியாவது அமெரிக்கா சென்றுவிட வேண்டும் என்பதையே லட்சியமாக வைத்துள்ளனர்
இப்படி இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அமெரிக்காவுக்குச் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் உயர்ந்தே வருகிறது.
7இல் ஒருவர் வெளிநாட்டினர்: அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு வாரியம் 2022ஆம் ஆண்டிற்கான அந்நாட்டின் மக்கள்தொகை தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 13.9% பேர் சட்டப்பூர்வமாக மற்றும் சட்டவிரோதமாக அங்கே குடியேறியவர்கள் ஆகும். கடந்தாண்டு இது 13.6ஆக இருந்த நிலையில், இந்தாண்டு சற்று அதிகரித்துள்ளது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவில் இப்போது வசிக்கும் 7 பேரில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.குறிப்பாக அங்கே இந்திய மற்றும் சீன மக்களின் எண்ணிக்கை 6% ஆக இருக்கிறது. இதற்கு முந்தைய சர்வேயில் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 27.09 லட்சமாக இருந்த நிலையில், அது 4.8% அதிகரித்து இப்போது 28.4 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல அங்குள்ள சீனர்களின் எண்ணிக்கை 3% அதிகரித்தது 28.3 லட்சமாக இருக்கிறது.
டாப் இடத்தில் மெக்சிகோ: இந்த லிஸ்டில் மெக்சிகோ மக்கள் தான் டாப்பில் உள்ளனர். ஒட்டுமொத்த மக்கள்தொகையில் இப்போது 23% அதாவது 1.06 கோடி பேர் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் ஆகும். இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை தான் அங்கே மிக அதிகம்.இதற்கு அடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 4.7 லட்சம் பேரும், வெனிசுலாவை சேர்ந்த 4.07 லட்சம் பேரும் அங்கு உள்ளனர்.
இந்த இரு நாடுகளில் இருந்தும் அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை ஓராண்டில் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆப்கனில் இருந்து அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை 229% அதிகரித்துள்ள நிலையில், வெனிசுலாவில் இருந்து வருவோரின் எண்ணிக்கை 22% ஆக உயர்ந்துள்ளது.
பழமைவாதிகள் எதிர்ப்பு: அமெரிக்காவில் வெளிநாட்டில் இருந்து வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இது குறித்து அந்நாட்டில் உள்ள ஒரு பிரிவினர் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக பழமைவாதிகள் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
உண்மை என்ன: இது குறித்து அமெரிக்காவின் கேடோ இன்ஸ்டிடியூட்டின் இணை இயக்குனர் டேவிட் ஜே பியர் கூறுகையில், “அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவரின் எண்ணிக்கை ஓராண்டில் வெறும் 0.3% மட்டுமே அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே அதிகரித்து வருகிறது. 1990களில் இருந்து நாம் டேட்டாவை எடுத்துப் பார்த்தால் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 76% குறைந்துள்ளது என்பதே உண்மை” என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் அதிகரிக்கும் வயதானவர்களின் எண்ணிக்கை, குறையும் புதிய குழந்தை பிறப்பு விகிதம் உள்ளிட்ட காரணங்களால் அங்கே தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதைச் சரி செய்யவும் அமெரிக்காவைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வைத்திருக்கவும் அமெரிக்காவுக்கு வெளிநாட்டினரின் பங்களிப்பு தேவை என்று புலம்பெயர்ந்தோரை சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் அனுமதிக்க வேண்டும் என்றும் டேவிட் தெரிவித்தார்.