Last Updated on: 28th June 2023, 02:37 pm
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரப் பள்ளிகளில் இனி தீபாவளிப் பண்டிகை விடுமுறை அளிக்கப்படும் என்று அந்த நகரத்தின் மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பு இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து சமூகவலைதளங்களில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதில் தான் பங்குவகித்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நகரப் பேரவை உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார் மற்றும் சமுதாயத் தலைவர்களுடன் இணைந்து தீபாவளிப் பண்டிகைக்கு பள்ளிகளில் விடுமுறை விடுவதைப் பெற்றுத் தந்ததில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். தீபாவளி வாழ்த்துகளை இப்போதே தெரிவிப்பதற்கு இது சரியான காலகட்டம் அல்ல எனத் தெரியும். இருப்பினும் மகிழ்ச்சியுடன் சொல்கிறேன் தீபாவளி வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் நியூயார்க் நகரப் பேரவை உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியப் பண்டிகையான தீபாவளிக்கு நியூயார்க் பள்ளிகளில் விடுமுறை விடவேண்டும் என்பது 20 ஆண்டுகால கோரிக்கை. அதற்கான போராட்டங்களை தெற்காசிய சமூகம் தொடர்ந்து முன்னெடுத்தது. தற்போது அதற்குப் பலன் கிடைத்துள்ளது ” என்று பதிவிட்டுள்ளார்.
இருப்பினும் இந்த விடுமுறை இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கே நடைமுறைக்கு வருமா என்பது தெரியவில்லை. ஏனெனில் 2023 – 2024 கல்வி ஆண்டுக்கான பள்ளி விடுமுறை அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டது என்று ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. ஊடக ஊகங்கள் ஒருபுறம் இருக்கட்டும் என்று இந்திய சமூகத்தினர் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.