அருணாச்சலில் மேலும் 30 இடங்களுக்கு புது பெயர் வைத்து சீனா…

அருணாச்சலில் மேலும் 30 இடங்களுக்கு புது பெயர் வைத்து சீனா…

Last Updated on: 2nd April 2024, 01:16 am

பீஜிங்: நம் நாட்டின் அருணாச்சல பிரதேசத்துக்கு உரிமை கோரி அடாவடியில் ஈடுபட்டு வரும் சீனா, அங்குள்ள 30 இடங்களுக்கு புதிய பெயர்கள் அறிவித்து, தன் சீண்டலை தீவிரப்படுத்தியுள்ளது.வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்துக்கு, நம் அண்டை நாடான சீனா உரிமை கோரி வருகிறது.தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் தென் பகுதி அது என்று கூறி வருகிறது.

இதற்கு, மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகிறது.இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில், கடல் மட்டத்தில் இருந்து, 13,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சேலா சுரங்கப் பாதையை, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்தார்.இதனால் எரிச்சல் அடைந்துள்ள சீனா, பிரதமரின் அருணாச்சல பிரதேச பயணத்தை கண்டித்துள்ளது.

அமெரிக்கா ஆதரவு

மேலும், கடந்த ஒரு மாதத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறது. இதற்கு, மத்திய அரசும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.இந்தியாவை மீண்டும் சீண்டிப் பார்க்கும் வகையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு, தன் மொழியில் பெயர்களை சூட்டியுள்ளது சீனா. இது தொடர்பாக, சீனாவின் சிவில் விவகாரத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டின் இறையாண்மையை காப்பாற்றும் வகையில், தனக்கு சொந்தமான பகுதிகளுக்கு அன்னிய மொழிகளில் பெயர் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது.அருணாச்சல பிரதேசத்தை, ஜாங்னான் என்று பெயரிட்டு சீனா அழைத்து வருகிறது. அங்குள்ள ஆறு இடங்களுக்கு, 2017ல் புதிய பெயரை சூட்டியது. அதைத் தொடர்ந்து, 2021ல் 15 இடங்கள், 2023ல் 11 இடங்களுக்கு புதிய பெயர் சூட்டியது. அந்த வரிசையில், தற்போது 30 இடங்களுக்கு புதிய பெயர்களை சீனா அறிவித்துள்ளது.

ஜெய்சங்கர் கிண்டல்

இது குறித்து நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது:அருணாச்சல பிரதேசம், முன்பும், இப்போதும், எப்போதும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். இதில் எந்த சந்தேகமும், மாற்றமும் கிடையாது.அருணாச்சலின் சில பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்கள் வைப்பதால், அந்த நிலைமை மாறப் போவதில்லை. அருணாச்சல் நம்முடைய பகுதியாகவே இருக்கும். உங்களுடைய வீட்டுக்கு நான் ஒரு பெயர் வைத்தால், அதற்காக அந்த வீடு எனக்கு சொந்தமாகிவிடுமா?

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment