அடுத்தடுத்து சரிந்த மழலையர் பள்ளி குழந்தைகள்.. உணவில் விஷம் வைத்த ஆசிரியர்.. பகீர் சம்பவம்

பெய்ஜிங்: சீனாவில் கிண்டர் கார்டன் ஆசிரியை ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு விஷம் வைத்த கொடூர சம்பவத்தில் அவர் மீது சீன நீதிமன்றம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

நமது சமூகத்தில் எப்போது ஆசிரியர்களுக்குத் தனியாக ஒரு மதிப்பு இருக்கவே செய்கிறது. வரும் கால சமூகத்தினரை ஆசிரியர்கள் தான் செதுக்குகிறார்கள் என்பதால் ஆசிரியர்களுக்குத் தனி மரியாதை இருக்கவே செய்கிறது.

அதேநேரம் சில ஆசிரியர்கள் மிகவும் கொடூரமான கீழ்த்தரமான காரியங்களிலும் ஈடுபடவே செய்கிறார்கள். அப்படியொரு ஷாக் சம்பவத்தில் சிக்கிய நபருக்குத் தான் இப்போது மிகக் கொடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கிண்டர் கார்டன்: சீனாவில் கிண்டர் கார்டன் வகுப்பிற்கு ஆசிரியராக இருந்த ஒருவர், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் சோடியம் நைட்ரைட் என்ற கொடூர விஷத்தைக் கலந்துள்ளார். அதைக் குடித்ததும் அங்கிருந்த 24 மாணவர்கள் அடுத்தடுத்து சரிந்துள்ளனர். அவர்களுக்கு மிக மோசமான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தில் 39 வயதான வாங் யுன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த இல் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாவோசு நீதிமன்றம் அவருக்குக் கடந்த 2020ஆம் ஆண்டிலேயே தூக்குத் தண்டனையை வழங்கியிருந்தது. அந்த கிண்டர் கார்டன் ஆசிரியர் செய்த சம்பவம் ஒட்டுமொத்த சீனாவையும் அதிர வைப்பதாக இருந்தது.சோடியம் நைட்ரைட்: கடந்த 2019 மார்ச் மாதம் அந்த கிண்டர் கார்டன் ஆசிரியருக்கு சக ஆசிரியருடன் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் சோடியம் நைட்ரைட்டை வாங்கியுள்ளார். சில வாரங்கள் கழித்து அந்த சோடியம் நைட்ரைட்டை அவர் மாணவர்கள் சாப்பிடும் உணவில் மிக்ஸ் செய்துள்ளார். இதைக் குடித்தவுடன் அந்த கிண்டர் கார்டன் மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விஷத்தை எடுத்துக் கொண்டதால் கடந்த ஜனவரி 2020இல் ஒரு குழந்தைக்கு உடல் உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். மேலும், சுமார் 24 பேருக்கு மோசமான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சீனாவில் சமீப ஆண்டுகளில் நடந்த மிகக் கொடூரமான சம்பவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

மரண தண்டனை: இந்த வழக்கை விசாரித்த ஜியாவோசு நீதிமன்றம் அவருக்குக் கடந்த 2020ஆம் ஆண்டில் தூக்குத் தண்டனையை வழங்கியிருந்தது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இருப்பினும், அவரது மேல்முறையீடு மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை வாங் யுனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக கடந்த திங்கள்கிழமை சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளி மீது 25 வயது இளைஞன் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். சீனாவில் இதுபோல பள்ளிகளில் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அங்குள்ளவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் சீனா ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times