Last Updated on: 26th May 2023, 12:11 pm
கனடாவுக்கு கல்வி கற்க வந்த இந்திய மாணவர்களில், மார்ச் மாதத்தில் மட்டும் எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள், அவர்களில் இருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.
இந்த தகவலைக் கொடுத்துள்ளது, ரொரன்றோவிலுள்ள ஒரு இறுதிச்சடங்கு மையம். Lotus என்னும் அந்த இறுதிச்சடங்கு மையம், கனடா முழுவதிலுமிருந்து, உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் அல்லது அஸ்தியை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் பணியைச் செய்துவருகிறது.
அதிகரிக்கும் எண்ணிக்கை:
இந்தியாவிலிருந்து கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், உயிரிழக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
முறைப்படி அனுமதி பெற்று கல்வி கற்பதற்காக கனடா வந்துள்ள இந்திய மாணவர்கள் எண்ணிக்கை,
2018: 171,505.
2019: 218,540.
2020: 179,510.
2021: 216,500.
2022: 319,000.
சடலமாக திருப்பி அனுப்பப்பட்ட இந்திய மாணவர்கள் எண்ணிக்கை,
2018: 8
2019: 16
2020: 12
2021: 11
2022: 33
வீட்டை விட்டு தூரமாக வந்து வீட்டு நினைவால் வாடும் மாணவர்கள், கல்வி கற்பதற்காக அனுப்பிவிட்டு, பிள்ளைகள் நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தையும் நல்ல நிலைக்கு கொண்டுவந்துவிடுவார்கள் என காத்திருக்கும் பெற்றோரின் பிள்ளைகள், என பல தரப்பினர் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.
படித்து முடிக்கவேண்டும், பணி அனுமதி பெறவேண்டும், குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கவேண்டும் என பொறுப்புக்களை நிறைவேற்றும் எண்ணத்தில் வரும் மாணவர்கள், நினைத்தது நினைத்தபடி நடக்கவில்லை, பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றமுடியவில்லை என்றதும், தாங்கள் வாழ்வில் தோற்றுப்போய்விட்டதாக நினைத்துவிடுகிறார்கள் என்கிறார் சர்வதேச சீக்கிய மாணவர்கள் கூட்டமைப்பின் நிறுவனரான Jaspreet Singh.
திரும்ப இந்தியாவுக்கே அனுப்ப உதவும் அமைப்பு:
இப்படி மாணவர்கள் தங்களால் தாங்க முடியாத அளவுக்கு மன அழுத்தத்துக்கு ஆளாகும் நிலையில், அப்படிப்பட்ட மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் Punjabi Community Health Services (PCHS) என்ற அமைப்பின் மேலாளரான Amanjit Kahlon, அப்படி கனடாவில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மாணவர்கள் சிலரை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பியதாக தெரிவிக்கிறார்.
இந்தியா திரும்பிய அந்த மாணவர்களின் குடும்பத்தினர், தங்கள் பிள்ளைகளின் நிலையைக் கண்டு, அவர்களைத் திருப்பி அனுப்பியதற்காக நன்றி கூறியதாகவும் தெரிவிக்கிறார் அவர்.ஆம், சொந்த நாட்டை விட்டு எங்கோ வந்து, சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்வதைவிட, வந்த இடத்துக்கே திரும்புவது எவ்வளவோ மேல்தானே!