வாஷிங்டன்: டிரம்பின் கருத்தை விமர்சித்திருந்த கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவுக்கு அமெரிக்கா அரசின் திறன் துறையில் அங்கம் வகிக்கும் தொழிலதிபர் எலான் மஸ்க் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அமெரிக்கா, 50 மாகாணங்களை உள்ளடக்கிய நாடு. இதில், 51வது மாகாணமாக அண்டை நாடான கனடாவும் இணைந்து கொள்ள வேண்டும் என்று அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். ‘கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் வரிகள் இருக்காது; வர்த்தகப் பற்றாக்குறை இருக்காது. கனடா பாதுகாப்பாக இருக்கும்’ உள்ளிட்ட ஆபரையும் அவர் வழங்கினார்.
அதுமட்டுமில்லாமல், அமெரிக்கா, கனடா இணைந்து ஒரே நாடாக இருப்பது போன்ற வரைபடத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, கனடா ஆட்சியாளர்களை கோபத்திற்குள்ளாக்கினார்.
அமெரிக்க அதிபரின் இந்த செயலுக்கு, அண்மையில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஜடின் ட்ரூடோ பதிலடி கொடுத்திருந்தார். கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்றும் திட்டத்திற்கு துளியளவும் வாய்ப்பில்லை என்றும், இரு நாடுகளும் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் பாதுகாப்பில் நட்புடன் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சை கிண்டலடிக்கும் விதமாக, பிரபல தொழிலதிபரும், டிரம்ப்பின் அரசில் பங்கு பெற இருப்பவருமான எலான் மஸ்க், ‘நீங்க ஒன்னும் கனடாவின் பிரதமர் கிடையாது. அதனால், நீங்கள் எது சொன்னாலும் பரவாயில்லை,’ என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.